No Image
 Fri, Jun 28, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் பகுதி - 2 : சுந்தரமூர்த்தி நாயனார்...!! பகுதி 5

Apr 18, 2020   Ananthi   548    சிவபுராணம் 

சுந்தரர் எம்பெருமானின் திருச்சன்னதியை அடைந்து இறைவனின் பாதக்கமலங்களை பணிந்து பதிகம் பாடி துதித்துக் கொண்டிருந்தார். அவர் பாடிய பதிகத்தால் மனம் மகிழ்ந்த எம்பெருமானும் அன்று இரவே அவர்களின் திருமணத்திற்கான வேலைகளையும் மேற்கொள்ளத் தொடங்கினார். அதாவது சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் திருமண வைபவத்தை நடத்தி வைக்கும் பொருட்டு திருவொற்றியூரில் உள்ள சிவத்தொண்டர்கள் அனைவரின் கனவிலும் எழுந்தருளி எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்டவரான சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் திருமணத்தை நடத்தி வைப்பீர்களாக...! என்று ஆணையை பிறப்பித்தார்.

சிவத்தொண்டர்கள் பலரும் ஒன்றிணைந்து சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் எம்பெருமான் இட்டுச்சென்ற ஆணையை எடுத்துரைத்து அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதற்கான சுபகாரியங்களை மேற்கொள்ள தொடங்கினார்கள். சங்கிலியாரின் திருமண செய்தியானது அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்களும் தனது மகளின் திருமணத்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டனர். மங்களகரமான ஒரு நன்னாளில் இவ்வையகமே வியக்கும் வண்ணம் சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் மிக சிறப்புடன் திருமணம் நடைபெற்றது.

எம்பெருமானின் அருள்பெற்ற சங்கிலியாரும், சுந்தரரும் கணவன்-மனைவியாக இணைந்து இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தினார்கள். சங்கிலியார் அழகிய மலர்களாலான மாலையை எம்பெருமானுக்கு தொடுத்தும், சுந்தரர் பைந்தமிழ் பாமாலையால் எம்பெருமானை போற்றியும் வழிபட்டனர். இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்து வணங்கி சிவத்தொண்டுகள் பல புரிந்து இல்லறமெனும் இன்பக்கடலில் மூழ்கி மிதந்து எல்லையில்லா இன்பம் பூண்டு வாழ்ந்து வந்தனர். காலங்கள் உருண்டோட துவங்கியது. வசந்த காலம் பிறந்தது.

திருவாரூரில் எழுந்தருளி உள்ள பெருமானுக்கு வசந்த காலத்தில்தான் பெருவிழா நடைபெறுவது வழக்கம். வனத்தில் இருந்து மரங்களுக்கு இடையே தென்றல் காற்று சுந்தரர் மேனியில் பட்டு ஒரு விதமான மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இத்தகைய வசந்த காலத்தில் தென்றலில் சுந்தரமூர்த்தி சங்கிலியாருடன் சுந்தரகீதம் பாடிய வண்ணம் சொக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உள்ளுணர்வு வசந்த காலத்தில் திருவாரூரில் நடைபெறும் திருவிழாக் காட்சியையும், அத்திருவிழாக் கோலத்தில் தியாகேசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் காட்சியையும் பரவையார் பக்திப் பெருக்கோடு பரமன் முன்னால் பரதம் ஆடி அகம் மகிழ்வதை போன்ற காட்சியையும் தோன்றச் செய்தது.

எம்பெருமானின் சிந்தனைகள் மனதில் ஏற்பட "எத்தனை நாளும் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே" என்ற குறிப்பை உணர்த்தும் தமிழ் பாமாலையை பாடினார். எம்பெருமானின் சிந்தனைகள் மனதில் அதிகரிக்க சுந்தரரால் திருவொற்றியூரில் இருக்கவே இயலவில்லை. எம்பெருமானின் நினைவால் மனம் மகிழ்ச்சி அடைந்த சுந்தரர் சங்கிலியாருக்கு தான் செய்து கொடுத்த சபதத்தை மறந்தார்.

எப்படியாவது திருவாரூருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என்ற திடமான முடிவிற்கு வந்தார். ஒருநாள் சுந்தரர் சங்கிலியாருக்கு தெரியாமல் திருவொற்றியூர் எல்லையை கடந்து அடியெடுத்து வைத்தார். சங்கிலியாருக்கு கொடுத்த சபதத்தை மீறிய அக்கணம் முதல் சுந்தரரது கண்கள் இரண்டும் ஒளியை இழந்தன. சுந்தரர், பார்வையில் ஒளி இல்லாமையை எண்ணி என்ன செய்வது? என்று சிந்தித்தார்.

அப்பொழுது சங்கிலியாருக்கு தாம் அளித்த உறுதிமொழியை காப்பாற்றாமல் மீறியதால் இறைவன் நமக்களித்த தண்டனையே இது என்பதை நன்கு உணர்ந்தார். பின்பு "அழுக்கு மெய்கொடு" என தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடி எம்பெருமானை இறைஞ்சி நின்றார். ஆனால் இம்முறையும் எம்பெருமான் சுந்தரருக்கு அருள்புரியாமல் காலம் தாழ்த்தி கொண்டிருந்தார்.

மேற்கொண்டு இருப்பவைகளை நன்கு பரிட்சித்து கொண்ட சுந்தரரும் இனியும் பொறுத்தலாகாது என்று எண்ணி எப்படியாவது திருவாரூரை அடைய வேண்டும் எனவும், தியாகேசப் பெருமானை வழிபட வேண்டும் என்ற மன உறுதியுடனும் இருந்தார். மேலும், பார்வையில்லாத விழிகளுடன் தட்டுத்தடுமாறி உடன் வருவோர் வழிக்காட்ட வடதிருமுல்லைவாயிலில் எழுந்தருளியுள்ள கருநட்ட கண்டரை தரிசித்து திருப்பதிகம் பாடி திருவெண்பாக்கம் என்ற ஊரினை அடைந்தார்.

பார்வை இழந்த சுந்தரருக்கு தொண்டர்கள் வழிகாட்டினர். திருவெண்பாக்கத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட தனக்கு விழிகள் இல்லையே?... என்று மனம் கலங்கிய சுந்தரர்,

பிறைசூடிய பெருமானே...!!

நீவிர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளீரா?

தாங்கள் இருந்தும் எம்மால் காண முடியவில்லையே?

இது என்ன? கால கொடுமையா?


என்று இறைவனிடம் இறைஞ்சி நின்றிருந்தார். சுந்தரரின் மன வருத்தத்தையும், அவர் எண்ணத்தையும் அறிந்து கொண்ட எம்பெருமான் அவர் கரங்களில் ஊன்றுகோல் ஒன்றை அளித்து சுந்தரா...!! "யாம் கோவிலில் உள்ளோம் நீர் போவீர்" என்று எப்பொழுதும் உரைப்பது அன்றி புதிதான முறையில் விடையளித்தார் விடையின்மீது எழுந்தருளிய எம்பெருமான்.

எப்போதும் இல்லாமல் இப்பொழுது எம்பெருமான் தன்னிடம் கடுமையாக உரைப்பதைக் கண்டு மனவேதனை அடைந்த சுந்தரர் "பிழையுறன பொறுத்திடுவர்" எனத் துவங்கும் பாடலை மெய்யுருக எம்பெருமானிற்காக பாடினார். இருப்பினும் எம்பெருமான் தன் மீது கொண்டுள்ள அன்பின் பொருட்டு தமக்கு இத்தலத்தில் வழிகாட்ட ஒரு ஊன்றுகோலை கொடுத்துள்ளார் என்பதை எண்ணி சிறிய அளவில் மனமகிழ்ச்சி கொண்டார்.

பின் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு அத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருவாலங்காடு, திருவூறல் போன்ற வௌ;வேறு எம்பெருமான் எழுந்தருளியுள்ள மற்ற தலங்களை வழிபட்ட வண்ணம் காஞ்சி மாநகரத்திற்கு வந்தடைந்தார். பல வண்ண மலர்களால் சூழப்பட்டுள்ள சோலைகள் நிரம்பிய காஞ்சி மாநகரத்தில், எழுந்தருளி காட்சி அளிக்கக்கூடிய காமாட்சி அம்மையாரின் சன்னதியை அடைந்து அம்மையை வணங்கி விட்டு ஏகாம்பரநாதரை காண அவர் எழுந்தருளியிருக்கும் சன்னதிக்கு சென்றார்.

தேவர்களுக்கு அமிர்தம் கிடைப்பதற்காகவும், ஜீவராசிகள் அனைவரின் நலனிற்காகவும் நஞ்சுண்ட பிறைமுடி நாதனே...!!

உன்னுடைய ஆனந்த சொரூபத்தை காண்பதற்கு அடியேன் செய்த பிழையை பொறுத்தருளி பார்வை அளித்திட வேண்டும் ஐயனே...!

பூவுலக வாழ்க்கையில் மனம் லயிக்காமல் என்னை தடுத்து ஆட்கொண்ட என் மன்னனே...!!

உன்னுடைய அருள் கோலத்தை கண்டு மகிழ உன் தோழனுக்கு பார்வை அளிக்கக்கூடாதா?...

என் தோழா...!! எம் உணர்வுகள் அனைத்தையும் அறிந்தும், அறியாதது போல இருப்பது முறையா?


என்றெல்லாம் பலவாறாக உரைத்த வண்ணம் எம்பெருமானிடம் இறைஞ்சி காமாட்சி அம்மையாரினால் வழிபடப்பட்ட ஏகாம்பரநாதரின் பாதக்கமலங்களை பணிந்து பாமாலை பாடினார் சுந்தரர்.

சுந்தரருடைய பாமாலைகளால் மனம் மகிழ்ந்த எம்பெருமான், காமாட்சி அம்மையாரால் உருவாக்கப்பட்ட ஏகாம்பரநாதரின் அழகிய தோற்றத்தை காணும் பொருட்டு சுந்தரரின் இடது கண் பார்வை மட்டும் அளித்து தமது திருக்கோலத்தை காட்டினார். எம்பெருமானின் அருட்பார்வையால் பார்வை கிடைக்க பெற்ற சுந்தரர் மனம் மகிழ்வுற்று ஆனந்த கூத்தாடினார். நிலத்தில் பன்முறை வீழ்ந்து எம்பெருமானை வணங்கி எழுந்தார். "ஆலந் தானுகந் தமுதுசெய் தானை" என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஏகாம்பரநாதரின் பாதக்கமலங்களை பலவாறாக துதித்து போற்றினார்.

பின்பு சுந்தரர் தனது தொண்டர்களுடன் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து சிவ வழிபாடு செய்து வந்தார். யாவரும் எதிர்பார்க்காத ஒரு நாளில் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு தமது சிவயாத்திரை பயணத்தை துவங்கினார். இரவென்றும், பகலென்றும் பாராமல் தமது யாத்திரையை மேற்கொண்டார். ஓய்வில்லாத பயணத்தினால் அவருக்கு உடல் சோர்வும், தளர்வும் ஏற்படத் துவங்கியது. உடலில் எந்த நிலையாயினும் எம்பெருமானை வழிபடுவது மட்டும் எந்நிலையிலும் கை விடுதல் ஆகாது என்ற எண்ணமே அவரை பல சிவத்தலங்களுக்கு அழைத்துச் சென்று தரிசித்து பதிகங்கள் பலவற்றை பாட வைத்தது.

பல பதிகங்கள் பாடிய வண்ணமே மாத்தூர் திருநெல்வாயில் வழியாக காவேரி ஆற்றை கடந்து திருவாவடுதுறையை அடைந்தார். திருவாவடுதுறையில் இருக்கின்ற திருத்துருத்தியை அடைந்து அவ்விடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வலம் வந்து வணங்கி தம் உடலில் ஏற்பட்டுள்ள இப்பிணியை ஒழித்து எம்மை காக்க வேண்டும் என்று பணிந்து நின்றார்.

சுந்தரருடைய அன்பிற்கு கட்டுப்பட்டு இருந்த திருத்துருத்தியார், தம்பிரானே...!! அச்சம் கொள்ள வேண்டாம். இக்கோவிலின் வடபுறத்தில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் நீராடினால் உமது உடலில் ஏற்பட்டுள்ள நோய்கள் யாவும் விலகும் என்று அருளினார். அரணாரின் அன்பு மொழியைக் கேட்டு மனம் மகிழ்ந்த சுந்தரர் கோவிலின் வடபுறத்தில் உள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரமான பஞ்சாட்சரத்தை மனதில் எண்ணிய வண்ணம் மூழ்கி எழுந்தார்.

சுந்தரர் குளத்திலிருந்து மூழ்கி எழுந்ததும் அவரது உடலில் துன்புறுத்தி வந்திருந்த பல நோய்கள் அகன்று கதிரவன் ஒளியில் இருள் நீங்கி புத்துணர்ச்சி பெற்றார். அதாவது, சுந்தரரின் உடலும் புத்துணர்ச்சியும் பெற்று புதுமேனியையும், தெம்பையும் பெற்றார். இறைவனின் அருளை போற்றி "மின்னுமா மேகம்" எனத் தொடங்கும் பதிகத்தை பாடி மகிழ்ச்சி கொண்டார். பின்பு எம்பெருமானின் அருளை நினைத்த வண்ணமாக தனது அடியார்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டு எல்லையை அடைந்தார் சுந்தரர்.

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானின் கோபுரத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். ஆதவன் மறையும் வேலையிலேயே திருக்கோவிலுக்குள் நுழைந்தார். திரு பரவையுண் மண்டலி என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபாடு செய்த வண்ணம் "தூவாயத் தொண்டு" என்று தொடங்கும் செந்தமிழ் பாமாலையினை பாடி மனம் குளிர்ந்தார் சுந்தரர். பின்பு "குருகு பாய" எனத் தொடங்கும் சிவப்பதிகத்தை பாடிய வண்ணமே சிவ அடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தை அடைந்தவுடன் விமானத்தை தரிசித்த வண்ணமாக புற்றிடங்கொண்ட எம்பெருமானின் பாதக்கமலங்களை போற்றி பணிந்தார்.

எம்பெருமானே...!! தங்களுடைய தோழனுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்திலிருந்து நீங்கும் பொருட்டு மற்றொரு கண்ணுக்கும் ஒளி அளிப்பிரோ...!!

என்று இறைஞ்சிய வண்ணமாக "மீளா வடிவை" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார்.

சுந்தரர் திருப்பதிகம் பாடியும், எந்தவிதமான மாற்றமும் ஏற்படாமல் இருப்பதை கண்டு

ஐயனே...! உமது திருமலர்த்தாளினை என்றும் விடாது பற்றிக் கொண்டிருக்கும் உமது அடியேனுக்கு தீராத துன்பம் ஏற்பட்டு இருப்பதை அறிந்தும்...

அவரை துன்பத்தில் இருந்து காத்தருளும் எம்பெருமானே...!!


அப்படி இருப்பவர் எம்மை மட்டும் காக்காமல் இருப்பது ஏனோ? என்ற குறிப்புடன் வெளிப்படக்கூடிய "அடிமையும், தோழமையும் கலந்த" என்னும் பொருள்படக்கூடிய தமிழ் பாக்களால் பதிகம் ஒன்றை பாடினார் சுந்தரர். சுந்தரமூர்த்தியார் இயற்றிய தமிழ் பாக்களின் மனம் குளிர்ந்த செஞ்சுடர் செம்மல் மனமிரங்கி அவருக்கு வலது கண்ணில் ஏற்பட்டுள்ள குறையை நிவர்த்தி செய்து பார்வையை அளித்தார்.

ஆதவன் உதிக்கையிலேயே ஆதவனை கண்டதும் மலர்ந்து எழும் தாமரை மலர் போல எம்பெருமானின் அருளால் பார்வை பெற்ற சுந்தரரின் முகமோ ஒளி பெற்றதோடு பேரானந்தம் அடைந்தார். அக்கணத்தில் இவ்வுலகையே மறந்து பரமனை எண்ணி பணிந்து போற்றி கொண்டிருந்தார். கண்பார்வை கிடைத்த சுந்தரர், உணர்ச்சிக்கு அடிமைபட்டு கண்மூடித்தனமாக செயல்பட்டமையால் பரவையாருக்கு செய்த துரோகத்தை எண்ணி மனவேதனை அடைந்தார்.

பின்னர் சுந்தரர் என்ன செய்வது? என்று புரியாமல் பரவையார் மாளிகைக்கு செல்ல தைரியம் இல்லாமல் அஞ்சினார். பின்பு தேவாசிரிய மண்டபத்திலேயே இரவு முழுவதும் தங்கி இருந்தார். சுந்தரர் எம்பெருமானை வழிபடுவதற்காக தம்மை விட்டு பிரிந்து சென்ற பிறகு பரவையார் அவருடைய பிரிவினை ஏற்றுக் கொள்ள இயலாமல், சொல்ல வார்த்தைகள் இல்லாத அளவிற்கு துன்பத்தை அடைந்தாள். பகல் பொழுதுகள் யாவும் இரவாகவும், இரவு பொழுதுகள் யாவும் பகல் பொழுதாகவும் அவளுக்கு கழிந்தன.

மனதில் சுந்தரரின் பிரிவினையை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிறிதளவு அதாவது, கடுகளவு நிம்மதி என்பது கூட இல்லாமல் மிகவும் துன்பப்பட்டாள். நீரில்லா செடியினை போல நன்கு துன்பப்பட்டு கொண்டிருந்த வேளையில் திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டாள். பின் அதனால் பரவையார் மேலும் மனவேதனையும், அவர்மீது கோபமும் கொண்டாள். இரவென்றும், பகலென்றும் பாராது மாலையிட்ட மணாளளின் நினைவாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பரவையார், இந்த செய்தியைக் கேட்டதும் மனமுடைந்து பட்டுகள் நிறைந்த ரத்தின மாலைகள் சூட்டப்பட்ட படுக்கையில் நித்திரை இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்திருந்தாள்.

இவ்விதமாக பரவையார் வாழ்ந்து வரும் காலத்தில் தேவாசிரிய மண்டபத்தில் தங்கியிருந்த சுந்தரர் தாம் இங்கு வந்திருப்பதாகவும், மாளிகைக்கு வர அஞ்சுவதாகவும் தமது ஏவலர்கள் சிலரை பரவையார் தங்கியிருக்கும் மாளிகைக்கு அனுப்பி வைத்து இத்தகவலை தெரிவிக்குமாறு ஏற்பாடுகள் செய்தார். சுந்தரரின் ஆணைப்படியே ஏவலர்கள் அனைவரும் பரவையார் இல்லத்திற்கு சென்றனர். ஆயினும் அவர்களால் பரவையாரை காண முடியவில்லை.

சுந்தரர் ஏவலர்களை அனுப்பிய செய்திகளை எப்படியோ தெரிந்து கொண்ட பரவையார், தோழியர்களிடம் அவருடைய மாளிகையின் கதவுகளை அடைத்து வைக்குமாறு ஆணையிட்டார். அதைப்போலவே பரவையாரின் மாளிகையின் கதவுகளும் அடைக்கப்பட்டன. ஏமாற்றத்தோடு திரும்பி வந்த ஏவலர்கள் சுந்தரரிடம் ஐயனே...!! தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரை திருமணம் செய்து வாழ்ந்த செய்தியை அறிந்து கொண்டிருந்த அம்மையார் எங்களை பார்க்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் தோழிகளிடம் உரைத்து கதவையும் தாழிட செய்துவிட்டார்கள் என்று கூறினார்கள்.

ஏவலர்கள் உரைத்ததை கேட்டு சித்தம் கலங்கிய சுந்தரர், இனி பரவையார் மாளிகைக்குள் எவ்விதம் செல்வது? என்று எண்ணி மனம் கலங்கினார். நன்கு சிந்தித்த சுந்தரர் பின்பு ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, உலக வாழ்க்கையில் நல்ல அனுபவமுள்ள, திறமை மிக்க, நற்குணங்கள் நிரம்பிய மாதர்களை பரவையாரிடம் தூது அனுப்பி வைக்கலாம் என்று எண்ணினார்.

அதற்கு தகுந்த மாதிரியே சில மாதர்களை அவர் சந்தித்து தனது மனதில் இருக்கும் குறைகளை வெளிப்படுத்தினார். மேலும், அதை பரவையாரிடம் எடுத்துரைத்து பரவையார் தம் மீது கொண்டுள்ள கோபத்தை மறந்து எம்மை மீண்டும் ஏற்றுக்கொள்ள செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மாதர்களும் அவரது எண்ணங்களுக்கு மதிப்பளித்து பரவையாரை சந்தித்து நல்லதொரு முடிவோடு திரும்பி வருகின்றோம் என்று உரைத்துவிட்டு பரவையார் மாளிகையை அடைந்தார்கள்.

மாளிகையில் பரவையாரை சந்தித்ததும் அவரிடத்தில் வணக்கத்தை தெரிவித்த வண்ணம் சுந்தரரின் எண்ணங்களை வெளிப்படுத்த தொடங்கினார்கள் அம்மாதர்கள். நற்குணங்கள் நிரம்பிய எங்கள் தலைவியே...!! தங்களுடன் மீண்டும் வாழ உங்கள் தலைவன் இவ்விடத்திற்கு வந்துள்ளார். அவருடைய பெருமையும், உங்களது பெருமையும் எண்ணிலடங்கா அளவில் இருக்கக்கூடியது. அவ்வாறு இருக்கையில் நீங்கள் அவரின் மீது கோபம் கொண்டு அவருடன் இணைந்து வாழாமல் தனித்து இருப்பது நமது பண்பிற்கு முறையானது அல்ல என்றும் கூறினார்கள்.

பரவையாரிடம், மாதர்கள் இறைவனின் திருவருளால் ஒளியிழந்த கண்களில் மீண்டும் ஒளிப்பெற்ற தலைவர் உங்களை காண வருகையில் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் தவிக்கவிட்டு அவரை துன்பத்தில் ஆழ்த்துவது முறையானதா? என்றும், ஒளிப்பெற்ற கண்களை வைத்து மீண்டும் துன்பத்தில் ஆள்வதற்காகவா அவர் மீண்டும் கண்களை பெற்றார்? என்றும் கூறினர். மேலும், அவர் இறைவனிடம் பெற்ற கண்களின் மூலம் உங்களின் நடனத்தையும், உங்கள் அன்பையும் காண்பதற்காகவே மட்டும்தான் தலைவியே...!! என்றவாறு பலவிதங்களில் தலைவியிடம் தலைவன் கொண்டுள்ள அன்பையும், தலைவி இல்லாததால் அவர் அடைந்து வரும் துன்பத்தையும் எடுத்துரைத்தனர்.

மாதர்கள் பலவிதங்களில் எடுத்துரைத்தும் அவர்களின் அறிவுரைகளில் சற்றும் செவி சாய்க்காமல் இருந்தார் பரவையார். நான் கொண்டுள்ள அன்பையும், என்னையும் சிறிதளவுகூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் எம்மை மறந்து வேறொரு மங்கையுடன் திருமணம் செய்து கொண்டார். அது எனக்கு மிகப்பெரிய ஆறாத துயரத்தையும், கவலையையும் அளித்தது. உங்களின் தலைவரின் குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் என்னிடம் பேசினாலும் அதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.

மென்மேலும் இதைப்பற்றி பேசி என்னை புண்படுத்தினீர்கள் எனில் நான் இவ்வுலக வாழ்க்கையை தவிர்த்து உயிரை மாய்ப்பது உறுதியாகும். தயவு செய்து இதைப்பற்றி பேசுவதை விடுத்து இங்கிருந்து போய்விடுங்கள் என்று மனதில் வலியும், கண்களில் சினமும் கொண்டு தன்னிடம் பேசவந்த மாதர்களிடம் உரக்கக் கூறினார் பரவையார். பரவையார் கூறிய கூற்றிற்கு மறுமொழி உரைக்க இயலாமல் அவ்விடத்தை விட்டு வெளியே வந்தனர் அம்மாதர்கள்.

பின்னர், மாதர்கள் சுந்தரர் இருக்கும் இடத்தை கவலை தோய்ந்த முகத்துடன் அடைந்தனர். அவர்களுடைய வருகைக்காக எதிர்பார்த்து கொண்டிருந்த சுந்தரர் அவர்களுடைய முகத்தை கண்டதும் நிகழ்ந்தது என்னவென்று சிறிதளவு புரிந்து கொண்டார். பின்பு மாதர்கள் அவரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும் எடுத்துரைத்தனர். அதைக்கேட்ட சுந்தரரும் மனதளவில் மிகவும் சோர்வுற்றார்.

பகல் பொழுது முடிந்து இரவு பொழுது வர துவங்கியது. இரவு பொழுதும் மெதுவாக நகரத் துவங்கி நடுஜாமத்தை அடைந்தது. சுந்தரரும் தூக்கமின்றி என்ன செய்வது? என்று யோசித்த வண்ணமாகவே இருந்தார். ஆனால் அவருடன் வந்திருந்த மற்ற அடியார்களோ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பரவையாரை பற்றிய சிந்தனைகள் சுந்தரரிடம் அதிகரிக்க அதிகரிக்க அவர் மனதில் கவலைகளும், வலிகளும் அதிகரிக்க தொடங்கின. இனி என்ன செய்வது? என்று புரியாமல் கவலை தோய்ந்த முகத்தோடு இறைவனை தியானித்த வண்ணமாக கண்விழித்து இரவு பொழுதில் தனித்த மரமாக நின்று கொண்டிருந்தார் சுந்தரர்.

தமது குறைகள் ஒவ்வொன்றையும் சடைமுடிநாதரிடம் கூறிய வண்ணமாக...

எம்பெருமானே...!!

உங்களின் அருளாசியுடன்தானே பரவையாரை மணந்து கொண்டேன்?...

இப்பொழுது அவள் என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை தாங்கள் அறிய மாட்டீரோ?

இது என்ன உங்களின் திருவிளையாடலா?

உங்களை நாடி வந்துள்ள இந்த அடியாரின் துன்பத்தை போக்கும் பொருட்டு...

இப்பொழுது இங்கு எழுந்தருளி எம்மை காத்து அருள்வீர்களாக...!!

என்று தமது எண்ணங்கள் யாவற்றையும் உரைத்து சிவபெருமானிடம் இறைஞ்சி நின்று கொண்டிருந்தார்.


எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான எம்பெருமான் சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று அவரின் துயரத்தை போக்குவதற்காக அருள்புரிய துவங்கினார். அந்த இரவு பொழுதிலும் எம்பெருமான் சுந்தரர் கொண்டுள்ள கவலையை போக்கும் பொருட்டு எழுந்தருளினார். எம்பெருமான் அவ்விடத்தில் எழுந்தருளியதை கண்டதும் பக்தி பெருக்கால் அவரின் திருவடிகளை எண்ணி வணங்கினார்.

எம்பெருமான் சுந்தரரை நோக்கி...

சுந்தரரே...!!

உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டுள்ளதா?


என்று எதுவும் அறியாதது போல் கேட்டார். இறைவன் இவ்விதமாக கேட்டதும், ஐயனே...!! தங்கள் ஆணைப்படி மகிழமரத்தின் கீழே சபதம் செய்து சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு நான் திருவொற்றியூரில் வாழ்ந்து வந்த செய்தியானது எப்படியோ பரவையாருக்கு தெரிந்துவிட்டது என்று கூறினார்.

சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டது பரவையாருக்கு தெரிந்ததால் பரவையார் என் மீது கோபம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், என்னால் தனது உயிரையே இழப்பதாகவும் கூறுகிறாளாம். எனக்கு ஐயனும், தாயுமாக இருக்கக்கூடியவரான தாங்களே... பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி... எம்முடைய நிலையை அவளிடம் எடுத்துரைத்து... எங்கள் இருவரிடமும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். மேலும், தாங்கள்தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார். சுந்தரர் இவ்விதம் உரைத்ததும், எம்பெருமான் சுந்தரரே...!! கவலையை மறப்பாயாக... இப்போதே பரவையாரிடம் உன் பொருட்டு தூது செல்கிறேன் என்று கூறினார்.

பரம்பொருளான இறைவன் இவ்விதம் உரைத்ததால் சுந்தரர் எல்லையில்லா மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டார். அவர்கள் இருக்கும் இடத்தில் எழுந்தருளி துன்பத்தை போக்கும் பொருட்டு எம்பெருமான் பரவையார் மாளிகையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்தில் இருந்த குபேரனும், அருந்தவ தவசிகளும் அவரை துதித்த வண்ணமாக அவர் பின்னே சென்று கொண்டிருந்தனர். திருவாரூர் நகரம் முழுவதும் தேவலோகத்தில் இருப்பதைப்போல காட்சியளித்தது. சிவனார் மணி வீதி வழியாக தூது செல்ல புறப்பட்டார்.

எம்பெருமான் பரவையார் மாளிகையை அடைந்த பின்பு தன்னுடன் வந்திருந்த தேவர்கள் என அனைவரையும் மாளிகையின் வெளியே நிற்க வைத்துவிட்டு எம்பெருமான் மட்டும் அந்தணர் வடிவம் கொண்டு பரவையார் மாளிகையை அடைந்தார். மாளிகையின் கதவினை தட்டிய வண்ணமாக பரவையாரே...!! கதவினை திறப்பாயாக... என்று அழைத்தார் பிறைமுடி நாதர். நித்திரையில்லாமல் தவித்து வந்த பூக்கள் நிரம்பிய மஞ்சத்தில் படுத்திருந்த பரவையார் அந்தணரின் குரல் கேட்டு அந்த நடு இரவில் எழுந்தார்.

இந்த நேரத்தில் நம்மை தேடி வரக்கூடிய சூழல் என்னவென்று புரியாமல் சிந்தித்த வண்ணமாக விரைந்து வந்து மாளிகையின் கதவைத் திறந்தார். அந்தணர் வடிவில் வந்திருந்த எம்பெருமானை வணங்கி வரவேற்றிய பரவையார், ஊர் மக்கள் உறங்கி கொண்டு இருக்கும் இவ்வேளையில் தம்முடைய இடத்திற்கு வந்திருப்பதற்கான காரணம் என்ன? என்று பணிவுடன் கேட்டாள்.

எம்பெருமான் (அந்தணர்) : பரவையாரே...!! நான் வந்த காரணத்தை கூறுகிறேன் கேட்பாயாக... நான் கூறுவதைக் கேட்டு அதை மறுக்காமல் எமது கோரிக்கையாக ஏற்றுக்கொள்வாயாக... என்று கூறினார்.

பரவையார் : என்னவென்று கூறுங்கள்?... அதை நான் அப்படியே செய்கிறேன் என்றார்.

எம்பெருமான் (அந்தணர்) : பரவையாரே... சுந்தரர் கர்மவினைப்பயன் காரணமாக செய்த தவறுக்காக அவரை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கி அவருடன் இணைந்து வாழாமல் இருப்பது முறையானது அல்ல என்று கூறினார். உன்னுடைய பிரிவால் சுந்தரர் துன்பம் அடைந்து உம்முடைய நினைவாகவே தேவாசிரிய மண்டபத்தில் வந்து தங்கி இருக்கின்றார். அவர் மீண்டும் உம்மோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கே வந்துள்ளார். அதை புரிந்து கொண்டு அவருடன் இணைந்து வாழ்வதுதான் நன்மை ஆகும் என்று கூறினார்.

பரவையார் : அந்தணரே...!! நீங்கள் உரைப்பது நன்று தான். இருந்தாலும் அவர் சிவத்தலங்களை தரிசிக்க செல்கின்றேன் என்று என்னிடம் உரைத்துவிட்டு பங்குனித் திருநாள் அன்று என்னை பார்க்க வருவார் என்று நான் எதிர்பார்த்த தருணங்கள் உங்களிடம் சொல்வதற்கு இல்லை. அவ்வாறு எதிர்பார்த்திருந்த தருணங்கள் யாவும் இனிமேல் இல்லை என்று தெரிந்தவுடன் நான் அடைந்த துன்பம் என்பது எல்லை இல்லாதது ஆகும். சிவத்தலங்களை தரிசிக்க போகிறேன் என்று என்னிடமிருந்து விடைபெற்று சென்ற என் நாயகன் திருவொற்றியூரில் வாழ்ந்து வந்த சங்கிலியார் என்னும் பெண்ணை மணந்து இல்வாழ்க்கையில் வாழ்ந்துள்ளார் என்ற செய்தியை கேட்டதுமே எனக்கும், அவருக்குமான தொடர்பு எள்ளளவும் இனியும் கிடையாது என்றார்.

இந்த இரவு வேளையில் இதை பற்றி பேசவா இவ்விடம் வந்துள்ளீர்கள்? என்று எம்பெருமானிடம் கேட்டார்.

எம்பெருமான் (அந்தணர்) : பரவையாரே...!! மனதில் இருக்கும் சினத்தை குறைத்துக் கொண்டு உன் நாயகன் செய்துள்ள குற்றத்தை பொறுத்துக் கொண்டு என் பொருட்டாவது சுந்தரரை ஏற்றுக் கொள்வாயாக...!! அதுதான் உமக்கும் தகுதியான செயலும் கூட என்று உரைத்தார்.

பரவையார் : அந்தணரே...!! இச்செய்தியை திரும்பத் திரும்ப உரைத்து என்னை மீண்டும் மீண்டும் காயப்படுத்தாதீர்கள். இது தங்களுடைய பெருமைக்கு ஒருபோதும் நன்மை அளிக்கப் போவதில்லை. நீங்கள் சொல்வதற்கேற்ப அந்த முடிவுக்கு நான் எப்பொழுதும் இணங்க போவதும் இல்லை. தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள் என்று கடுமையாகவும், அதேசமயத்தில் தம்முடைய முடிவான பதிலையும் கூறினாள் பரவையார்.

பரவையார் கூறியதை கேட்டதும் அந்தணர் வடிவத்தில் இருந்த எம்பெருமான் பரவையாரிடம் உரையாட விரும்பாமல் அவ்விடத்திலிருந்து விடைபெற்று சென்றார். எம்பெருமானின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த சுந்தரரோ சற்றும் யோசிக்காமல், பிரபஞ்ச நாயகனை என்பொருட்டு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க பரவையார் மாளிகைக்கு தூது அனுப்பி உள்ளேன். இப்போதைக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று வாய்விட்டு அலறிய வண்ணம் வருந்திக் கொண்டிருந்தார்.

எவ்விதமாக எண்ணிக்கொண்டு இருந்தாலும் மறுபக்கம் இறைவன் என்பொருட்டு பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி அவள் கொண்டுள்ள ஊடலை தீர்த்துவிட்டு அவளுடன் என்னை இணைத்து வைப்பார் என்று மகிழ்ச்சிக் கொண்டார் சுந்தரர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க சுந்தரரால் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இருக்க முடியவில்லை. அங்கும், இங்குமாகவே அல்லல் பட்டுக் கொண்டிருந்தார். எம்பெருமான் வரும் வழியை எதிர்நோக்கி தம்முடைய விழியையும், மனதையும் செலுத்திக் கொண்டு இருந்தார்.

எம்பெருமான் அந்தணர் உருவத்தைத் தவிர்த்து பிறைசூடிய அண்ணலாக சுந்தரர் முன்னால் தோன்றினார்.

எம்பெருமானைக் கண்டதும் என்னை ஆட்கொண்ட அண்ணலே...!!

இரவு பொழுதும் என்று பாராமல் எமக்காக எமது துணைவியிடம் ஏற்பட்டுள்ள பிணக்கைப் போக்கி...!!

வெற்றிப் பெருமிதத்தோடு இவ்விடத்தில் எழுந்தருளி உள்ளீர்களே...!!

இனி உங்கள் கருணையை என்னவென்று உரைப்பேன்?


என்று உள்ளமும், முகமும் மலர கூறினார் சுந்தரர்.

சுந்தரர் கூறியதை கேட்ட பிறை அணிந்த எம்பெருமான் சுந்தரா...!! உமது பெருமைகளையும், ஆற்றலையும், அறத்தையும் அவளிடம் எடுத்துரைத்தும் அவள் எந்தவொரு முடிவையும் எடுக்க இயலாமல் எடுத்த முடிவிலேயே நிலையாக நிற்கின்றாள். உன்னோடு இணைந்து வாழ விருப்பமில்லை என்பதில் திண்ணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் வெறுப்போடு என்னையும் திருப்பி அனுப்பிவிட்டாள் என்று கூறினார்.

எம்பெருமான் கூறியதைக் கேட்டதும் மனம் கலங்கிய சுந்தரர் கண்கலங்கி இரு கைகளை இணைத்து வணங்கிய வண்ணமாக...

அய்யன் அருளோடு கூறினால் இவ்வுலகத்தில் நிகழாது ஒன்றுமே இல்லையே?...

முப்புரம் எரித்த மறையவனே...!!

தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் வாழ ஆலகால விஷம் உண்ட ஆலகாலனே...!!

தம்மை அன்புடன் வழிபட்ட மார்க்கண்டேயனுக்கு துன்பம் என்று அறிந்து அவருக்கு ஏற்பட்ட துன்பத்தில் இருந்து விடுவித்து அவரை காத்து தமது தொண்டராக ஏற்றுக் கொண்ட அம்பலத்தரசே...!!

என்மீது மட்டும் தங்கள் அருட்பார்வை வரவில்லையா? சுவாமி...

நான் வேண்டாதவன் தானே என்று எண்ணி அவ்விடத்திலிருந்து திரும்ப வந்துவிட்டீர்களா?

இறைவா... எனக்காக மீண்டும் ஒருமுறை பரவையாரிடம் சென்று அவள் கொண்டுள்ள பிணக்கையும், சினத்தையும் போக்குவீர்களாக?

நான் கொண்டுள்ள நோயையும், துயரத்தையும் நேரில் கண்டது தாங்கள் மட்டுமே...

அதை எல்லாம் கண்டும் தங்களது உள்ளம் இறங்கவில்லையா?


இன்று இரவு பொழுதில் அய்யன் அருளோடு என்னை பரவையாரிடம் சேர்க்காவிட்டால் நான் என் உயிரை நீத்துவிடுவேன். இது உறுதி என்று புலம்பி கண்ணீரால் எம்பெருமானின் திருப்பாதங்களை குளிரச் செய்தார்.

தம்முடைய திருவடியில் சரணம் என்று விழுந்து கிடக்கும் சுந்தரரை அருளோடு பார்த்த எம்பெருமான், சுந்தரா...! எழுந்திரு... மனம் வருந்தாதே... உம்முடைய துயரத்தை நான் உணர்ந்தது போல எப்படியும் பரவையார் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றேன். மீண்டும் அவள் உன்னுடன் இணைந்து வாழ்வதற்கு சூழலை உருவாக்குகிறோம்.

கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பாயாக... என்று எம்பெருமான் சுந்தரரிடம் உரைத்து விட்டு மீண்டும் பரவையார் மாளிகைக்கு செல்லப் புறப்பட்டார். தன் மாளிகையில் இருந்து அந்தணர் சென்ற பின்பு பரவையார் மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு குழப்பமும், கலக்கமும் ஏற்படத் துவங்கியது.


Share this valuable content with your friends


Tags

வித்தகன் நான் கன்னி ராசி கிளியை கனவில் கண்டால் எதன் அடிப்படையில் வர்ணங்களை பயன்படுத்த வேண்டும்? கோவிலில் குங்குமம் பெறுவது போல் கனவு கண்டால் என பலன்? எஸ்.பி.பாலசுப்ரமணியம் குளிகையில் சுபக்காரியங்கள் செய்யலாமா? சுக்கிர திசையில் சோபகிருது திடீர் அதிர்ஷ்டம்... சமுதாயத்தில் பெயர் எந்த விரலில் திருநீறு இட வேண்டும்? விஷ்ணுவை கனவில் கண்டால் jothi போர் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலுக்குச் சென்று மலையில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குரு நானக் தேவ் 23.12.2019 Rasipalan in pdf format!! swing தங்க காசு திருட்டு போவது கையில் உள்ள விளக்கு அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?