No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: போருக்கு தயாராக இருந்த மூன்று பட்டணங்களின் வேந்தர்கள்! பாகம் - 75

Aug 11, 2018   Vahini   662    சிவபுராணம் 

ரதத்தின் பணிகள் யாவும் நிறைவுற்றவுடன் தேவர்கள் அனைவரும் ரதத்தினை கண்டு மெய் மறந்தனர். பின்னர் தன் இயல்பு நிலைக்கு திரும்பிய தேவர்கள் எம்பெருமானை எண்ணி தியானித்தனர். எம்பெருமானும் போருக்கு செல்வதற்கு தேவையான ஆடை, அலங்காரத்தோடு தேவர்கள் முன்னிலையில் தோன்றினார்.

அவ்வகை சிகையலங்காரத்துடன் ரதத்தில் அமர்ந்தார். அவ்வேளையில் ரதத்தின் அருகிலிருந்த முனிவர்கள் அனைவரும் வெற்றி வெற்றி என்று முழக்கமிட்டனர். அகிலத்திற்கும் அன்னையான பார்வதி தேவி எம்பெருமானின் அருகில் அமர்ந்து திரிபுர சம்ஹாரத்தை காண வேண்டினார்.

பின்பு இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் அவர்களது விமானங்களில் அமர்ந்து யுத்தத்திற்கு தயாராக இருந்தனர். ரதத்தில் தேவி அமர்ந்த பின்பு எம்பெருமான் பிரம்ம தேவரை கண்டு புறப்படலாம் என்று கூறினார்.

எம்பெருமானின் ஆரோகணத்தை கேட்ட பிரம்ம தேவர் கடிவாளத்தை இயக்கி அயத்தினை இயக்கினார். ரதமானது புறப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரம் செல்வதற்குள் ரதத்தின் இருசுகள்(வண்டியச்சு) முறிந்து ரதம் நின்றது. இருந்தும் சர்வ வல்லமை கொண்ட சிவபெருமான் அருகில் இருக்கும்போது வேறு எவரின் நினைவுகளும் இன்றி முழு முதற்கடவுளான விக்னங்களை களைபவரான விக்னேஸ்வரனை வணங்காமல் போருக்கு புறப்பட்டனர். இவர்களின் செய்கையால் கோபம் கொண்ட விநாயகர் தேரின் அச்சை முறித்து தேர் புறப்படுவதில் தடையை ஏற்படுத்தினார்.

இப்போது எம்பெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார். அதாவது, கணபதியை வணங்காது எச்செயலை தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டாது என்று வரமளித்த சிவபெருமானே, கணபதியை வணங்காது ரதத்தில் அமர்ந்து ரதத்தை புறப்படச் சொன்னார். தன் தந்தையான எம்பெருமான் தன்னை வணங்காது புறப்பட்டதாலும், தேவர்கள் அனைவரும் தன்னை மறந்தமையாலும், ரதத்தின் இருசுகளை முறித்து திரிபுர பயணத்தில் தடையை உண்டாக்கினார் விநாயகர்.

தேவர்கள் அனைவரும் ரதத்தின் வண்டியச்சு முறிந்ததை கண்டு அச்சம் கொண்டு திகைத்து நின்றனர். இதன் காரணத்தை அறிந்த சிவபெருமான் தன் மைந்தனான கணபதியை நினைத்து செய்யும் செயலானது எவ்விதமான தடையுமின்றி வெற்றி பெற வேண்டும் என திருவுள்ளம் கொண்டார்.

அதனால், சிவபெருமான் பிரம்ம தேவரிடம் கணபதியை வணங்காது தொடங்கிய எந்தவொரு செயலும் வெற்றிக் கொள்ளாது. ஆகவே, அனைத்து தேவர்களும் கணபதியை வணங்கி அவருடைய ஆசியை பெறுமாறு கூறினார்.

பின்பு தேவர்கள் தன் தவறினை அறிந்து கணபதியிடம் இழைத்த பிழையை மன்னித்து, இங்கு நடைபெறும் எந்த செயலும் தோல்வி கொள்ளாமல் வெற்றி அடைய அனுக்கிரகம் வேண்டி துதித்தனர். தன் தந்தைக்கு இன்னல்களை ஏற்படுத்துவது என்பது முறையானதல்ல என்பதனை உணர்ந்த விநாயகர், தேவர்கள் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு காட்சியளித்தார்.

பின்பு முறிந்த வண்டியச்சை சீர் செய்து திரிபுரர்களை அழித்து தேவர்களை காக்கும் பொருட்டு அவரும் திரிபுர யுத்தத்தில் பங்கு கொண்டார். எம்பெருமான், பிரம்ம தேவரிடம் இப்பொழுது ரதத்தை புறப்படச் சொன்னார்.

பிரம்பிக்கத்தக்க இந்த ரதமானது திரிபுரத்தை நோக்கி தனது பயணத்தை இனிதே தொடங்கியது. தேவ படைகளுடன் கணங்களின் அதிபதியான கணபதியும், தேவர்களின் படைத்தலைவரான முருகப்பெருமானும் சென்றனர்.

மதியிழந்த அசுரர்கள் தங்களின் நகரத்தை தாக்கி அழிப்பதற்காக தேவர்களும், அவர்களுடன் எம்பெருமானான சிவபெருமானும் வந்து கொண்டு இருப்பதாக அசுரர்களின் ஒற்றர்கள் வேந்தர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால், வேந்தர்களான அசுரர்கள் தங்களின் நகரத்தை யாராலும் அழிக்க இயலாது என்ற ஆணவத்துடன் நம்மிடம் போருக்கு வரும் அனைத்து தேவர்களையும் அவருடன் வருகின்ற சிவபெருமானையும் நாம் தோற்கடிக்க வேண்டும் என்று கூறி போருக்கு மூன்று பட்டணங்களின் வேந்தர்களும் தயாராக இருந்தனர்.


Share this valuable content with your friends