மாய கலைகளில் வித்தகர்களான பண்டிதர்கள் அசுர வேந்தனின் வேண்டுகோளை ஏற்று, அவர் விரும்பிய உபதேசத்தை வழங்க தொடங்கினர். அதாவது, அவர்களின் வீழ்ச்சிக்கான பாதையை காட்டத் தொடங்கினர்.
பாவங்கள் செய்த அசுர வேந்தனின் மனம் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் தர்மத்தை இரு வேறு விதமான பொருளாக எடுத்துக் கூறினர். அதாவது, இறைவனை உருவ வழிபாடு செய்வதால் எந்தவிதமான பயனும் இல்லை என்றும், மேலும் உருவ வழிபாட்டின்போது மேற்கொள்ளும் பூஜை மற்றும் ஆராதனை போன்ற வழிபாடுகளால் பொருள் விரயம் தான் உண்டாகுமே தவிர மற்ற எந்தவிதமான பயனும் இல்லை என்றும் கூறினர்.
இதுபோல இன்னும் பல வகைகளில் அசுர வேந்தனின் மனம் மகிழும் விதமாக பல கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். பண்டிதர்கள் எடுத்துக்கூறிய உபதேசத்தால் இதுவரை எம்பெருமான் மீது கொண்ட பற்று குறையத் தொடங்கின.
அசுர வேந்தன் பண்டிதர்களின் உபதேசங்களை வேத வாக்காக எண்ணினார். மேலும், இந்த உபதேசத்தால் நான் அடைந்த மகிழ்ச்சியை போல், என் பட்டணத்தில் வாழும் குடிமக்களுக்கும் தாங்கள் உபதேசம் செய்ய வேண்டும் என்று பணிந்து நின்றார்.
பண்டிதர்களும் அதற்கு விருப்பம் தெரிவிக்க அசுர வேந்தன் உடனடியாக தனது மக்களுக்கு இவர்களின் பெருமைகளை எடுத்துக்கூறி இவர்களிடம் உபதேசம் பெற்று தீட்சை பெற வேண்டும் என ஆணையிட்டான்.
இவரது ஆணையால் அனைத்து அசுரர்களும் வித்தகரான பண்டிதருடன் வந்த சிஷ்யர்களால் உபதேசம் பெற்று தீட்சை பெற தொடங்கினர். மேலும், தன்னுடைய பட்டணத்தில் மட்டுமல்லாது தன்னுடைய சகோதரர்களின் பட்டணங்களுக்கும் சென்று அங்கு அவர்களுக்கும் உபதேசம் வழங்கி தீட்சை அளிக்க வேண்டும் என்று கூறி அவர்களை தன்னுடைய சகோதரர்களின் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தார் வித்யுமாலி.
வித்யுமாலியின் மற்ற இரண்டு சகோதரர்களின் பட்டணத்திற்கு சென்று அவர்களுக்கும் உபதேசமும், தீட்சையும் பண்டிதர்கள் அளித்து வந்தார்கள்.
பண்டிதர்களிடம் தீட்சை பெற்ற மன்னர்களும், மக்களும் எது உண்மை? எது பொய்? என்று அறியாவண்ணம் பாவங்களை செய்ய தொடங்கினார்கள். அதனால், அவர்களின் மூன்று கோட்டைகளுக்கும் அரணாக இருந்து அவர்களை பாதுகாத்து வந்த சிவபூஜையின் பலம் குறையத் தொடங்கின.
ஏனெனில், பண்டிதர்களிடம் தீட்சை பெற்ற அசுரர்கள் உண்மையான மெய்ப்பொருளை கண்டறிவதற்கான வழியை விடுத்து பாவங்கள் நிறைந்த வழியில் பயணிக்க தொடங்கினர். அதாவது, அறச்செயல்களான சிவபூஜைகள், யாகங்கள், தானங்கள் மற்றும் இறைவழிபாடு ஆகியவற்றை மறந்து அதர்மம் நிறைந்த செயல்களை செய்யத் தொடங்கினர்.
திரிபுர வேந்தர்கள் கடுந்தவம் புரிந்து, சகல சௌபாக்கியங்களுடன் நிறைந்த பட்டணங்களில் அறநெறியை தவறி அதர்ம வழியில் பயணித்தார்கள். மேலும், பண்டிதர்களுடன் ஜேஷ்டா தேவி குடியேறியதும் அங்கு வாசம் செய்துவந்த லட்சுமி தேவி அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றார்.
தனது ஞானப் பார்வையால் பட்டணங்களில் நிகழும் அதர்ம செயலை அறிந்த திருமால், இனி அவர்களின் அழிவை யாராலும் தடுக்க இயலாது என்றும், இதுவரை பூவுலகிலும், தேவலோகத்திலும் வாழ்ந்து வந்த உயிர்கள் அனுபவித்து வந்த இன்னல்கள் நீங்கும் காலம் வருவதை உணர்ந்தார்.
மேலும், தான் உருவாக்கிய மாய புருஷர்கள் அவர்களுக்கு அளித்த பணியை நன்முறையில் செய்ததால் தான் எண்ணிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறப் போவதை எண்ணி மகிழ்ந்தார்.
பட்டணங்களில் இவ்விதம் நடைபெற்று கொண்டிருக்க தேவர்கள் எம்பெருமானை எண்ணி பல காலங்கள் தியானித்துக் கொண்டு இருந்தனர். அவர்களுடன் திருமாலும் இணைந்து எம்பெருமானை எண்ணினார்.
அவர்கள் செய்து வந்த சிவபூஜையும், அவர்களின் நாவில் இருந்து உச்சரித்துக் கொண்டிருந்த எம்பெருமானின் திருநாமமும், கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை அடைந்தது.