வைகுண்டம் சேர... கைசிக ஏகாதசி... மறவாமல் வழிபடுங்கள்...!!
Dec 10, 2019 Ananthi 321 ஆன்மிகம்
🌟 கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியை கைசிக ஏகாதசி என்றும் பிரபோதினி ஏகாதசி என்றும் போற்றுவர்.
🌟 இது, வைகுண்ட ஏகாதசி போல, வைணவர்களுக்கு மிக முக்கியமான ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.
🌟 கைசிக ஏகாதசி விரதமிருந்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலனைக் காட்டிலும் பலன் வாய்ந்தது. கைசிக ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாவ சுமையிலிருந்து விடுபடலாம்.
🌟 இன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் அவரின் மூதாதையர்கள் செர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள்.
🌟 இன்றைய நாளில் விரதம் கடைப்பிடிப்பவர்கள் ஆயிரம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
🌟 இந்த கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர். அன்று, மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.
கைசிக ஏகாதசி பற்றிய ஒரு புராண கதை :
🌟 தமிழகத்தில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நம்பிபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் மகேந்திரகிரிமலை உள்ளது.
🌟 மலையடிவாரத்தில் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நம்பாடுவான் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், தீவிர விஷ்ணு பக்தர். ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பிபெருமாளை வழிபடுவது வழக்கம்.
🌟 ஒருநாள் ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பிபெருமாளை வழிபட காட்டு வழியாக வந்தார். அவரை, ஒரு பிரம்மராட்சன் தடுத்து நிறுத்தி, நீ எனக்கு உணவாக வேண்டும் எனக் கூறினான். அதற்கு நம்பாடுவான், இன்று நான் விரதம் மேற்கொள்கிறேன். நம்பிபெருமாளை தரிசித்து விட்டு திரும்பி வருகிறேன், அதன் பிறகு என்னை உணவாக்கி கொள், எனக்கூறி விட்டு நம்பிபெருமாளை தரிசிக்கச் சென்று விட்டார்.
🌟 அப்போது கோவிலில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த நம்பாடுவான் கோவிலின் உள்ளே செல்ல முடியாததால் வெளியே நின்று தன்னிடம் இருந்த யாழ் இசைக்கருவியால் கைசிக பண் இசைத்து நம்பிபெருமாளை வழிபட்டார்.
🌟 தான் ஆட்கொள்ளப் போகும் பக்தனுக்கு திருமுகத்தைக் காண்பிக்க, நேர் எதிரே நின்றிருந்த கொடிமரத்தை விலகி நில், எனக்கூறி நம்பாடுவானுக்கு அருட்பேரொளி வீசி தரிசனம் தந்தார் நம்பிபெருமாள்.
🌟 பிரம்ம ராட்சசனுக்கு தான் உணவாகப் போவதாக வாக்குக் கொடுத்திருந்த நம்பாடுவான் கோவிலில் இருந்து திரும்பி காட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். வழியில் பின்தொடர்ந்து முதியவர் ரூபத்தில் வந்த நம்பிபெருமாள், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, போகும் வழியில் ஒரு ராட்சசன் உள்ளான், அவன் அந்த வழியாக வருவோர், போவோரை பிடித்துச் சாப்பிட்டு விடுவான். ஆதலால் நீ அந்த வழியாக போக வேண்டாம் எனக் கூறினார்.
🌟 எனினும் அதை மீறி, காட்டுக்குப்போய் பிரம்ம ராட்சசனிடம் என்னை சாப்பிட்டுக் கொள் என்றார் நம்பாடுவான். ஆனால் ராட்சசனோ எனக்கு பசியே இல்லை, உன் உடல் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டான். ஆனால் கைசிக பண் இசைத்த பலனை மட்டும் எனக்கு தாருங்கள் என்றான். அங்கு, திடீரென ஒரு பேரொளி வீசியது. முதியவர் ரூபத்தில் பின் தொடர்ந்து வந்த நம்பிபெருமாள் இருவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.
🌟 எனவே கைசிக ஏகாதசியான இன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக!
Share this valuable content with your friends