No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி துலா ஸ்நானம் !!

Oct 21, 2019   Ananthi   400    ஆன்மிகம் 

ஐப்பசி மாதத்தைத் தமிழில் துலா மாதம் என்பார்கள். துலா என்றால் தராசு. தராசு எவ்வாறு நடுநிலையை காட்டி நிற்கிறதோ, அதேபோல் துலா மாதமும் பகலையும், இரவையும் சமமாகத் துல்லியமாகக் கொண்டுள்ளது என்பதை குறிக்கவே துலா மாதம் என்று குறிப்பிடப்படுகிறது.

கங்கையில் மூன்று நாட்களும், யமுனையில் ஐந்து நாட்களும் குளித்தால்தான், விஷ்ணு லோகம் கிட்டும். ஆனால், காவிரியில், துலா மாதத்தில் ஸ்நானம் செய்தாலே போதும், விஷ்ணு லோகம் கிடைக்கும் என காவிரி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

நரகாசுரனை வதைத்த மகாவிஷ்ணுவிற்கு வீரஹத்தி தோஷம் (வீரனை கொன்ற பாவம்) ஏற்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவிரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ஐப்பசி மாதமான துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாவக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டார் கங்கை அன்னை. அதற்கு ஸ்ரீPமகாவிஷ்ணு, நீ காவிரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும் என்றார். எனவேதான் ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரியில் ஐக்கியமாகின்றன.

காவிரியில் நீராடுவோம் :

ஐப்பசி மாதத்தில் காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாவங்கள் விலகும்.

துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான கடைமுழுக்கு வைபவம் அன்று நீராடி, மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி திதி கொடுப்பவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதால் ஒருநாளாவது காவிரியில் நீராடி முன்னோர் கடன் செலுத்துவோம்.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு.

இப்படிப்பட்ட புண்ணியமான நாட்களில், காவிரி பாயும் அனைத்து இடங்களிலும், ஒரு நாள் நாமும் கலந்துகொண்டு துலா ஸ்நானம் செய்து அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை பெறுவோம்.




Share this valuable content with your friends