No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் : என்னவொரு அதிசயம் எங்கும் காணக் கிடைக்காத காட்சி! பாகம் - 53

Jun 28, 2018   Vahini   680    சிவபுராணம் 

மெய்யை உணர்ந்த சித்த ஞானிகளே காணக்கூடியவை மற்றும் காண இயலாத அனைத்திலும் நிறைந்திருப்பவர் சிவனே என மெய்யறிவைக் கொள்கின்றார்கள். மானிடர்களாக பிறந்த அனைவரும் விதவிதமான ஆடைகள் மற்றும் ஒப்பனைகள் யாவும் செய்து கொண்டு பல விதமான தோற்றங்களை பெற்றாலும் அதை உடுத்தியவன் என்பவன் அப்படியே தான் இருக்கின்றான்.

அதை போல் தான் சிவ உருவமானது மற்ற உருவங்களில் கலந்து இருக்கும் போது அதை புதிய தோற்றமாக காட்சியத்தாலும் அதனை உணரும் போது அதில் நிறைந்திருப்பவர் சிவமயமேயாகும். தான், எனது போன்ற அகங்காரம் இருக்கும் பட்சத்தில் அவனால் என்றும் சிவனை அறிய இயலாது.

எப்போது அவன் கொண்ட அகங்காரம் அவனை விட்டு விலகிய நொடியில் அவனும் சிவனே என உணர்கின்றான். எம்பெருமானான சிவபெருமான் நாரதரே மேனை தேவியின் மனதில் இருந்த அஞ்ஞான எண்ணம் வெளிப்படவே எனது தோற்றமானது அவளின் கண்களுக்கு மட்டும் விகாரமான தோற்றம் கொண்டவராக காட்சியளித்தேன் என்று கூறினார்.

அவள் மனதில் கொண்ட மாயை இவ்வேளையில் விலகிக் கொண்டு இருக்கின்றன. இப்பொழுதில் மேனை என்னை காண அனைத்தும் சுபிட்சமாகும் என்று எம்பெருமான் நாரதரிடம் கூறினார்.

நாரதரும் எம்பெருமான் அருளியபடி மேனை தேவியை காண சென்றார். நீ உன் மகள் பற்றிய கவலையை விடுத்து சிவபெருமானை மனதில் எண்ணி அவர் மீது பக்தி கொள்ளும்படி திருமால் மேனைக்கு அறிவுறுத்திக் கொண்டு இருந்தார். அவ்வேளையில் நாராயணா இடையூறுக்கு மன்னிக்கவும் என்று கூறி மேனையை பார்த்து என்னுடன் வாருங்கள் உங்களின் மன வேதனைகள் யாவும் நீங்கும்.

மனக்குழப்பங்கள் இருந்த இடங்கள் தெரியாது போகும் என கூறி பரமசிவன் வீற்றிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அமர்ந்துள்ள எழில்மிகு தோற்றம் கொண்டவராக காட்சியளிக்கும் எம்பெருமானின் மெய் தோற்றம் காண்பாயாக எனக் கூறி சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தை காட்டினார் நாரதர்.

சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தை மேனை தேவிக்கு நாரதர் காட்டினார். இருப்பினும் நாரதர் கூறிய வார்த்தைகளில் விருப்பம் இல்லாது நான் அடைந்துள்ள துன்பங்கள் நீங்குமோ என்று கூறிக்கொண்டு நாரதர் காட்டிய திசையை கண்டார் மேனை தேவி.

மனதில் இருக்கும் அஞ்ஞான எண்ணங்களை விடுத்து திவ்ய சொரூபமாக காட்சியளிக்கும் எம்பெருமானான சிவபெருமானை காண்பாயாக என்று கூறினார் நாரதர். மனதில் விருப்பம் இன்றி வேறுவழி எதுவும் தம்மிடம் இல்லை என எண்ணிக் கொண்டு நாரதர் காட்டிய திசையை மேனை தேவி கண்டார்.

என்னவொரு அதிசயம் காணக் கிடைக்காத காட்சி! நாரதர் காட்டிய திசையில் இருந்து மேனையின் பார்வை அகலாது அங்கேயே இருந்தது. சற்று நேரத்திற்கு முன்பு இதே ரிஷப வாகனத்தில் இருந்த ஆண்டி எங்கே? யார் இந்த புதிய மனிதர்? அதே ரிஷப வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவர் யார்? தான் கண்ட ஐந்து முகமும், பத்து கைகள் இருந்த இடமும் எங்கே?

காண்போரை வசியம் செய்யும் எழில்மிகு திருமுகமும், அழகான கரங்களும் கொண்ட இந்த இளைஞன் யார்? எங்கே ஆண்டி அணிந்து வந்த அணிகலன்களான சர்ப்பங்கள்? அவை இருந்த இடங்களில் அழகான அணிகலன்களா?

ஆயிரம் சூரியன் கொண்ட ஒளியும் கம்பீரமான தோற்றமும், அழகான பார்வையும், இனிமையான சிரிப்பும் விலை மதிப்பில்லாத உன்னதமான கிரீடங்களும், உடைகளையும் அணிந்து காட்சியளிப்பவரை நன்கு கவனித்தார் மேனை தேவி.

குழம்பி இருந்த மேனை தேவி, இதுவரை யார் யார் எல்லாம் மிகுந்த அழகு உடையவர்கள் என எண்ணியிருந்தேனோ அவர்களை விடவும் இன்னொருவர் இருக்கக்கூடும் என இருந்தால் அவரே சிவபெருமான் ஆவார். தன்னையும் அறியாது அவளது கைகள் எம்பெருமானான சிவபெருமானை வணங்கியது.

ஆயிரம் சூரியனிடம் இருக்கும் ஒளிக்கதிர்கள் யாவும் சங்கமித்து மிகவும் அழகாக, காண்போரின் மனதில் இருக்கும் இருளை போக்கும் பிரகாசமான பொழிவு கொண்ட இவரே சிவபெருமான் ஆவார். தேவர்கள், முனிவர்கள் உரைத்தபடியான தோற்றத்தை கொண்டவரும் இவரே.

இந்த பிரபஞ்சத்தையே தன்னுள் கொண்ட சிவபெருமானை மணமுடிக்க என் மகள் பார்வதி எவ்வளவு பெரிய புண்ணியவதி என எண்ணினார் மேனை தேவி. அவருடைய ஒவ்வொரு அங்கங்களையும், லட்சணங்களையும் கண்டு தன் மனதில் கொண்ட ஐயங்கள் யாவும் நீங்கி மிகுந்த மகிழ்ச்சி கொண்டார்.

பின் எம்பெருமான் தேவ கணங்களோடு அரண்மனைக்குள் வரவே அவரை இன்முகத்தோடு வரவேற்றார் மேனை தேவி. பிரம்ம தேவரும் விஷ;ணுவும் சிவபெருமானின் இருபுறங்களில் நிற்க அவர்களை பூஜித்து வரவேற்றாள்.

பின்பு இமவான் மன்னன் நாங்கள் தன்யர்கள் ஆனோம் என்று கூறி தன் மகளை மணக்க வருகை தந்துள்ள எம்பெருமானின் திருவடிகளை தீர்த்த நீரை கொண்டு அலம்பினார். அவரின் திருவடிகளில் இருந்து வழிந்தோடிய நீரை கையில் எடுத்து அங்கிருந்த அனைவரின் தலையிலும் அந்நீரை தெளித்தார்.

அங்கு கூடியிருந்த மக்கள், பார்வதி தேவி செய்த கடும் தவத்தினால் தன் விருப்பம் போல் தன்னுடைய மனதிற்கு பிடித்த மணமகனையும் மணந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து எல்லாம் வல்ல இன்பங்களையும் அடையப்போகிறாள் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு மிகவும் மகிழ்ந்தாள் மேனை தேவி.

இமவான் மன்னன் எம்பெருமானிடம் தன் மகளிடம் கொடுத்த வாக்கையும் என் மகளை நான் ஈன்ற பொழுதில் இருந்து எதிர்பார்த்த இந்த தருணங்களை அமைத்து தந்தமைக்கு சொல்வதற்கு வார்த்தைகள் என்பதே இல்லை தேவரே மிகுந்த நன்றிகள் என கூறினார். என் மகளின் விருப்பப்படி உற்றார், உறவினர் முன்னிலையில் என் மகளை கரம் பிடித்து அவளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.


Share this valuable content with your friends