திரிசந்தி கூறியதைக் கேட்டதும் பராசரர் மிகுந்த கோபம் கொண்டவராக, என் தந்தையையும் அவரது சகோதரர்களையும் வஞ்சனை செய்து ஒரு அரக்கன் கொன்றுள்ளான். அவர்கள் இறக்கும் தருவாயில் இந்த உலகம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்ததா? மற்ற தெய்வங்கள் என்ன செய்து கொண்டிருந்தன? இதுநாள் வரை நாம் வணங்கி வரும் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து தனது தந்தைக்கும், அவரது சகோதரர்களுக்கும் இந்த நிலையை ஏற்படுத்திய அரக்கனையும், ஏன் மூவுலகிலும் உள்ள அரக்கர்களையும் வஞ்சித்து இதற்கு சரியான தண்டனையை அளித்தாக வேண்டும். அப்பொழுதுதான் என் மனம் நிம்மதி அடையும் என்று மிகுந்த ஆவேசத்துடன் கூறினார் பராசரர்.
வசிஷ்டரின் அறிவுரைகள் :
பராசரரின் கூற்றுகளை கேட்ட வசிஷ்டர், குழந்தாய்! ஒரு அரக்கன் செய்த தவறுக்காக மூன்று உலகங்களிலும் இருக்கக்கூடிய அரக்கர்களை கொல்வது என்பது முறையான செயலாக இருத்தலாகாது. என் மக்களை வஞ்சித்து கொன்ற அந்த கொடிய அரக்கனை உன் மூலமாகத்தான் நான் கொல்ல வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளேன். ஆகவே நீ சிவபெருமானை நோக்கி கடுந்தவம் செய்து அந்த அரக்கனை அழிக்க வேண்டும் என்று கூறினார்.
தவம் புரிய செல்லுதல் :
தனது குருவும், தாத்தாவும் ஆன வசிஷ்டரின் கூற்றுக்கிணங்கி தனது தந்தை மற்றும் அவரது சகோதரர்களை கொன்ற அரக்கனை அழித்து நிர்மூலமாக்குவேன் என்று கூறி தன் தாய் மற்றும் தனது குருவிடம் ஆசிப்பெற்று சிவபெருமானை நோக்கி தவமிருக்க தன்னந்தனியாக வனத்திற்குள் தனக்கான இடத்தை தேர்வு செய்ய கிளம்பினார்.
வனத்தில் இருந்த ஒரு நதியின் அருகே நதியின் மணல்களைக் கொண்டு சிவலிங்கத்தை உருவாக்கினார். பின்பு சிவலிங்கத்தின் மீது அழகிய நறுமண மலர்களை வைத்து அலங்காரப்படுத்தினார். அந்த சிவலிங்கத்தின் அழகிய பிம்பத்தை தனது மனதில் வைத்து சிவனை எண்ணி தவமிருக்கத் துவங்கினார்.
சிவபெருமான் காட்சி அளித்தல் :
அச்சிறுவயதில் அன்ன ஆகாரமின்றி சிவபெருமானின் அருளுக்காக கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தார். பராசரர் மேற்கொண்ட தவத்தினால் மகிழ்ந்த எம்பெருமான் பராசரருக்கு காட்சி அளித்து, பராசரரை நோக்கி உமது தவத்தினால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும், உனது தவத்திற்கு உண்டான வரத்தைக் கேட்பாயாக என்றும் கூறினார்.
வரம் பெறுதல் :
பராசரர் எம்பெருமானிடம் நான் பிறந்தது முதல் எனது தந்தையை நான் கண்டதே இல்லை. ஆனாலும் அவரை காண வேண்டும் என்ற ஆவல் என் மனதில் இருந்து கொண்டே இருக்கின்றது. ஆயினும் எனது தந்தையையும் அவரது சகோதரர்களையும் கொன்ற அரக்க குலம் முழுவதையும் அழிப்பதற்கான வழியை எனக்குத் தாங்கள் கூறி அருள்புரிய வேண்டும் என்று வேண்டி நின்றார்.
தந்தையை காணுதல் :
சிவபெருமானும் பராசரர் வேண்டிய வரத்தை அருளி அவ்விடத்திலேயே பராசரரின் தந்தையான சக்தியின் உருவத்தை தோன்றச் செய்து, இவரே உன் தந்தையார், உன் தந்தையைக் கண்டு அவரிடம் ஆசி பெறுவாயாக... என்று கூறினார். பராசரர் முதன்முதலில் தனது தந்தையை கண்டவுடன் அவர் மனதில் கொண்ட மகிழ்ச்சி என்பது அளவில்லாத வகையில் இருந்தது.
தந்தையே! நான் பிறந்தது முதல் உங்களை காண வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் ஆசையானது இன்று சிவபெருமானின் அருளால் நிறைவேறியது என்று கண்ணீர் மல்க தன் தந்தையை பார்த்துக் கூறினார். அவரின் தந்தையான சக்தி பராசரரை நோக்கி உன்னை மகனாக ஈன்றெடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன். உன்னால்தான் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் கைலாயத்தில் வாழ்கின்ற பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறி தனது மகிழ்ச்சியை தன் மகனிடம் பகிர்ந்து கொண்டார்.
பின்பு பராசரரின் தந்தையான சக்தி தன் தாய், தந்தை மற்றும் மனைவி பற்றிய விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு எப்பொழுதும் நீர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறி தனக்கு இவ்விதம் மகிழ்ச்சி அளித்த சிவபெருமானைப் பணிந்து, மகிழ்வுற வணங்கி பின்பு கைலாயம் நோக்கி செல்லத் தொடங்கினார். பின்னர் சிவபெருமான் பராசரரை நோக்கி அரக்கர்களை அழிப்பதற்கான யாகம் வளர்ப்பு முறையையும், அதற்கான உபதேசங்களையும் கூறி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார்.
வசிஷ்டரின் மனமாற்றம் :
சிவபெருமான் அவ்விடம் விட்டு மறைந்து சென்றதும் பராசரர் எம்பெருமான் அருளிய உபாசனைகளை நினைவில் கொண்டு தன் இருப்பிடம் நோக்கி விரைந்துச் சென்றார். பின்பு தனது குருவான தாத்தாவிடம் எம்பெருமான் அருளிய உபாசனைகளையும், தான் தந்தையை கண்டதை பற்றியும் எடுத்துரைத்து ஆனந்தம் கொண்டு, பின்பு தந்தையும் அனைவரை பற்றியும் வினவினார் என்றும், பின்பு தான் தந்தையிடம் ஆசிப்பெற்றதையும் பராசரர் எடுத்துரைக்க எடுத்துரைக்க வசிஷ்டரின் மனமும் ஓரளவு திருப்தியான நிலையை அடையத் தொடங்கியது.