No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் : பார்வதிதேவி எம்பெருமானின் சிலையை உருவாக்குதல் ! பாகம் - 33

Jun 27, 2018   Vahini   523    சிவபுராணம் 

சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு விவரம் அறிந்த அகவையில் இருந்தே தோன்றியது. அவ்வெண்ணத்தை என்னால் எப்படி மாற்றிக் கொள்ள இயலும் தாயே. அவரை திருமணம் செய்வதற்காக எல்லா வகையான மார்க்கங்களையும் நான் முயற்சி செய்வேன் என்று கூறினார்.

இனி தன் மகளின் மனதை மாற்றுவது என்பது இயலாத செயல் என்பதை உணர்ந்த மேனை தேவி, தன் மகள் எல்லா ஆடம்பர வசதிகளையும் தவிர்த்து வனத்திற்கு சென்று தவம் மேற்கொள்வதையாவது தடுக்க வேண்டும் என்று எண்ணினார்.

அதன் பொருட்டு என் அன்பு மகளே நீ சிவனை மணம் செய்வதை நான் தடுக்கவில்லை. அதன் பொருட்டு நீர் தவம் மேற்கொள்ள செல்லும் வன பயணத்தை விடுத்து, இந்த அரண்மனையில் இருந்து நீர் வேண்டுவனவற்றை செய்வாயாக என கூறினார்.

அன்னையே நான் என் மணவாளன் ஆன சிவபெருமானை எண்ணி தவம் மேற்கொண்டு, அவரை நான் மணம் புரிய வேண்டும். என் நினைவுகளில் அவர் மட்டுமே நிறைந்துள்ளார். இனி வரும் காலங்களில் நான் அவரை பிரியாமல் என்றும் அவருடன் இருக்கவே நான் விருப்பம் கொண்டுள்ளேன்.

என்னுடைய விருப்பம் உங்களின் ஆசியின் துணையுடன் நான் தொடங்கவே விருப்பம் கொண்டுள்ளேன் என்று தன் மனதில் உள்ள மையல் எண்ணங்களை தன் தாயிடம் அவரின் மனம் வருத்தப்படாத வகையில் கூறினார்.

இனி எவ்வகையிலும் தன் மகள் தன்னை விடுத்து வனத்திற்கு செல்வதை தடுக்க இயலாது என்பதனை உணர்ந்த மேனை தேவி, என் ஆசை மகளே உன் விருப்பம் போல் எல்லாம் இனிதே நடைபெறட்டும் என தன் மகள் பார்வதி தேவியை ஆசிர்வதித்தார்.

தன் விருப்பத்திற்கு தன் பெற்றோர்களின் ஆதரவு கிடைத்தது என எண்ணி பார்வதி தேவி மகிழ்ந்தார். தவம் புரிவதற்காக வனத்திற்கு செல்ல ஆயத்தமான தேவியுடன் அவர்களின் தோழிகளும் இணைந்து அரண்மனையில் உள்ள தங்களின் பெற்றோர்களின் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தவம் மேற்கொள்வதற்கான பயணத்தை தொடர்ந்தார்.

பார்வதி தேவி, தன் தந்தையின் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனத்தை தேர்வு செய்து அதில் தங்குவதற்கான குடிலை அமைத்தார். பின் அந்த குடில் சுற்றி மரக்கன்றுகளையும், அழகான பூச்செடிகளையும் அங்கு வைத்தார்.

பின்பு, அங்கு சிவபெருமானின் லிங்க வடிவத்தை உருவாக்க எண்ணினார். மேலும், அவ்வழியாக செல்லும் வறியவர்களுக்கு உணவளித்து உபசரித்து வந்தார். அவ்வேளையில் நாரத முனிவரின் வருகை வரவே அவரை வணங்கி நின்றார்.

நாரதரிடம் அன்று தன் மனதில் நினைத்த மற்றும் தன் மனதிற்கு பிடித்தவரையும், தான் மணம் செய்ய விரும்புவோரை பற்றியும் கூறினார். நாரதரும் தேவியின் விருப்பம் ஈடேறட்டும் என்று ஆசிர்வதித்தார்.

பின்பு தேவி தன் மனதில் நினைத்த எண்ணத்தை நாரதரிடம் கூறினார். அதாவது, இங்கு சிவலிங்கத்தை எவ்விதம் உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை பற்றி கூறுமாறும் கேட்டுக் கொண்டார்.

சிவபெருமான் அனைத்தையும் துறந்தவர். அவரை மனதில் எண்ணி அன்புடன் பிரதிஸ்டை செய்தால் பக்தர்களுக்கு விரைந்து வந்து காட்சி அளிக்கக்கூடியவர் என்று கூறினார். கைலாயத்தில் குடி கொண்டுள்ள எம்பெருமானை மனதில் எண்ணி சிலையை உருவாக்கினால், அங்கு எம்பெருமான் எழுந்தருள்வார் என்றார்.

தேவியும் வனத்தில் எம்பெருமானின் சிலையை உருவாக்க நல்ல வளமுள்ள மணலை எடுத்து வந்தார். நந்தி தேவரோ சிவபெருமானிடம், கைலாய நாதரே! தங்கள் மீது கொண்டுள்ள மையலால் அரண்மனை வாழ்க்கையை விடுத்து வனத்தில் அன்னை பார்வதி தேவி அடைந்துள்ள இடர்பாடுகளையும் தங்களின் உருவம் உள்ள சிலையை உருவாக்க கொண்டுள்ள விருப்பத்தையும் எடுத்துரைத்தார்.


Share this valuable content with your friends