No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: நாரதரின் தவத்தை கலைக்க முயற்சித்த தேவேந்திரன் !! பாகம் - 146

Dec 29, 2018   Ananthi   560    சிவபுராணம் 

பிரம்மதேவரின் புதல்வரான நாரதர் முன்னொரு சமயம் எம்பெருமானான சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தார். நாரதர் தவ நிலையில் இருப்பதை தனது ஒற்றர்களின் மூலம் அறிந்த இந்திர தேவர் சற்று மன சஞ்சலத்துடன் காணப்பட்டார். அவர் மனதில் பலவிதமான கேள்விகள் தோன்றி மறையத் தொடங்கின. துறவு நிலையில் இருந்து வந்த நாரதர் தவ நிலைக்குச் சென்ற செய்தியானது இந்திர தேவரை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.

ஏனெனில் நாரதர், திருமாலின் மீது மிகுந்த பக்தி உடையவர். நாரதர் கேட்க பெருமாள் எதையும் கொடுக்கக்கூடியவர். அவ்வாறு இருக்க நாரதர் ஏன் எம்பெருமானை நோக்கி தவமிருக்கிறார் என எண்ணத் தொடங்கினார் தேவேந்திரன். நாரதருக்கு தேவர்களின் வேந்தனாக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதோ என்ற கண்ணோட்டத்தில் எண்ணத் தொடங்கினார் தேவர்களின் அரசனான இந்திர தேவன்.

பின்பு, நாரதர் இந்த தவத்தில் வெற்றியடைந்து எவ்விதமான வரங்களையும் பெறக்கூடாது என்பதை மட்டும் கணக்கில் கொண்டு, நாரதரின் தவத்தில் பலவிதமான இன்னல்களை ஏற்படுத்த தொடங்கினார் இந்திர தேவர். கலகம் புரிந்து நன்மை புரியும் நாரதரிடம் கலகம் புரியத் தொடங்கினார் தேவர்களின் வேந்தனான இந்திரன்.

பஞ்சபூதங்கள் உதவுதல் :

தனது தேவேந்திர சபையில் பஞ்சபூதங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அனைத்து தேவர்களையும் அழைத்து, நாரதர் செய்து கொண்டிருக்கும் தவ நிலையை கலைக்க தகுந்த ஏற்பாடுகளையும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் தேவர்களின் வேந்தனான இந்திரன்.

வேந்தனின் உத்தரவிற்கு இணங்கி பஞ்சபூதங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தேவர்கள், நாரதர் தவம்புரியும் இடத்திற்கு சென்று பஞ்சபூதங்களினால் நாரதர் புரிந்து வந்த தவ நிலையை கலைக்கும் பொருட்டு பலவிதமான இன்னல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களது முயற்சிகள் அனைத்தும் நாரதரின் முன்னால் வெற்றி அடையாமல் தோல்வியே அடைந்தன. பின்பு, தோல்வியடைந்த தேவர்கள் இந்திரலோகம் சென்று தேவேந்திரனிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தனர்.

தேவர்கள் கூறியதைக் கேட்ட இந்திர தேவர், ஒரு சாதாரண துறவி செய்யும் தவத்தினை உங்களால் கலைக்க முடியவில்லை... என்று கடிந்து கொண்டார். பின்பு, அங்கிருந்த தேவர்கள் அனைவரையும் அவ்விடம் விட்டு செல்லுங்கள் என்று மிகுந்த சினத்துடன் கூறினார். தனிமையில் இருந்து கொண்டு நாரதரின் தவத்தினை எவ்விதம் கலைப்பது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவரின் எதிரே சோம பானத்தை ஏந்தி வந்திருந்த தேவ மங்கையர்களைப் பார்த்ததும் அவருக்கு நாரதரின் தவத்தினை கலைப்பதற்கான சிந்தனைகள் உண்டாயின. அதாவது தனது இந்திரலோகத்தில் இருந்த அழகில் சிறந்த, காண்போரை வியக்க மற்றும் மதி இழக்கச் செய்யும் வகையில் உருவம் கொண்ட அப்சரஸ் தேவ மங்கையர்களை கொண்டு நாரதரின் தவத்தைக் கலைக்க முடிவு செய்தார்.

தேவ மங்கையர்களின் முயற்சி :

தேவலோகத்தில் இருந்த தேவதைகளையும் மற்றும் அப்சரஸ் தேவ மங்கையர்களையும் அழைத்தார் இந்திரன். பின்பு, அவர்களில் மதி இழக்கச் செய்யும் நடன பாவத்திலும் தோற்ற பொழிவில் சிறந்தவர்களையும் தேர்வு செய்து, அவர்களிடம் தவம் செய்து கொண்டிருக்கும் நாரதரின் தவத்தைக் கலைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார். தேவேந்திரனின் ஆணைக்கு இணங்கி தேவ மங்கையர்களும் நாரதர் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர்.

தேவ மங்கையர்கள் தனது நடன பாவத்தாலும், பலவிதமான இசைகளாலும் தங்களது முழு ஆடல் திறமைகளையும் கொண்டு அவரின் தவத்தை கலைக்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், நாரதரோ மனதில் சிவபெருமானை எண்ணி தவ நிலையில் ஆழ்ந்து கொண்டிருந்ததால் அவருக்கு நிஜ உலகில் நிகழ்ந்து கொண்டிருப்பது யாது? என்று அறியாது முழுவதுமாக தன் சிந்தனை மற்றும் மெய் என அனைத்துமே எம்பெருமானை எண்ணி அவரின் காட்சிக்காக காத்துக் கொண்டிருந்தார்.

தேவ மங்கையர்கள் பலவாறாக முயற்சித்தும் நாரதரின் தவத்தினை கலைக்க இயலவில்லை. மேற்கொண்டு முயற்சித்தும் அவர்களின் முயற்சிக்கு எவ்விதமான பலனுமின்றி தோல்வியை திரும்பத் திரும்ப சந்திக்க தொடங்கினர். மேற்கொண்டு முயற்சிப்பது என்பது பயன் அளிக்காது என்பதை உணர்ந்த தேவ மங்கையர்கள் இந்திரலோகம் சென்று இந்திர தேவரிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்கத் தொடங்கினர்.


Share this valuable content with your friends