No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம்: முதல் ஜாம பூஜை தொடங்குதல் !! பாகம் - 142

Dec 21, 2018   Ananthi   382    சிவபுராணம் 

மரங்கள் நிறைந்த அடர்ந்த வனத்தில் உடல்பலமும் பெருங்குடும்பஸ்தனுமான வேடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வனத்தில் இருக்கும் மிருகங்களை வேட்டையாடுவதோடு மட்டுமின்றி அந்த வனத்தின் வழியாக செல்லும் வழிப்போக்கர்களிடம் வழிப்பறி செய்தும் பிழைத்து வந்தான். வேடன் இளம் வயதிலிருந்தே எந்தவொரு நற்செயலையும் புரியாமல் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் குருத்ருஹன்.

வேட்டையாடச் செல்லுதல் :

தனது வாழ்நாளில் மிருகங்களை வேட்டையாடி அதை புசித்த வண்ணமே இருந்தமையால் அவனுக்கு ஞானம் என்னும் ஜீவ ஒளி என்பது எட்டாத கனியாகவே இருந்தது. நாம் என்ன விதைக்கின்றோமோ அதுவே விளைவது இயல்பாகும் என்பதற்கு உகந்தாற்போல் வேடனின் வாழ்க்கையும் இருந்து வந்தது. இவ்விதம் இருக்கும் பட்சத்தில் ஒரு சமயம் சுபிட்சமான சிவராத்திரி சம்பவித்தது. அதையும் அறியாத வேடனின் தந்தை, தாய், மனைவி முதலியோர் அவனை நோக்கி அந்த மஹாசிவராத்திரி தினத்தன்று எந்த வகையிலாவது வேட்டையாடி உண்பதற்கு மாமிசம் மற்றும் உணவு வகைகளை கொண்டு வந்து கொடுக்கும்படி வேண்டினார்கள்.

உடனே வேடன் தன் வில் மற்றும் அம்பை எடுத்துக்கொண்டு தனது குடும்பத்தாரின் பசியை போக்குவதற்காக வனத்திற்கு சென்று மிருகங்களைத் தேடியலைந்தான். வேடனும் பல இடங்களில் தேடியும் ஒரு மிருகமும் அவன் பார்வையில் தென்படவில்லை. மிருகங்கள் தான் கிடைக்கவில்லை என்றாலும் பறவைகளுங்கூடக் அவனின் கண்களுக்கு புலப்படவில்லை. மாலைப்பொழுதும் நெருங்கியது. சூரியனும் அஸ்தமித்தது. சந்திரன் வெளிப்பட நெடுதூரம் தேடி அலைந்தும் ஒரு மிருகங்கள் கூட தென்படவில்லை. வேடன் மனதிலோ தன் வீட்டில் தன் குழந்தைகளும், தாய் தந்தையரும், மனைவியும் உணவின்றி இன்னல்கள் கொண்டு இருப்பார்களே என்று எண்ணி மனம் வருந்தினான்.

இன்று எந்த ஒரு வகையிலாவது சிறிதேனும் உணவை (மாமிசம்) தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து அலைந்து கொண்டிருந்தான். மேலும் அலைந்து கொண்டிருந்தமையால் உடல் சோர்வும், தாகமும் ஏற்படவே சிறிது தூரத்தில் மதியின் வெளிச்சத்தில் தடாகத்தில் சிறிது தண்ணீர் இருப்பதை கண்டான்.

வேடன் பதுங்குதல் :

வேடன் தன் அருகிலிருந்த தடாகத்தில் சிறிது தண்ணீர் பருகியவுடன் மனதளவில் தெளிவு கொண்டான். அந்த தடாகத்தை பார்க்க வேடனின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. பின் தான் கொண்டு வந்த ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை நிரப்பிக் கொண்டு தடாகத்தின் கரையில் தழைத்திருந்த வில்வமரம் ஒன்றில் ஏறி மறைந்து கொண்டான். தண்ணீர் பருகி தாகத்தை தணித்துக் கொள்ள தடாகத்திற்கு ஏதேனும் மிருகங்கள் வரும்போது அவற்றைக் கொன்று தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று எண்ணினான்.

அந்த வில்வ மரத்தின் மீது மறைந்திருந்த நிலையில் மிருகங்கள் எப்போது வரும் என்றும், நான் எப்போது அவற்றை வேட்டையாடி என் இருப்பிடம் செல்வேன் என்றும், வேடன் நினைத்து பசியுடன் வருந்தி இன்று நமக்கு உண்பதற்கும் இரையில்லையே என்று தனது மனதை நொந்து வருந்திக் கொண்டு மிருகங்களின் வருகைக்காக கண் விழித்து காத்துக் கொண்டிருந்தான். இரவின் இருளால் அவன் அமர்ந்து கொண்டிருந்த மரம் வில்வ மரம் என்பதும் அம்மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதும் வேடனுக்கு தெரியாது. வேடன் உறங்காமல் மிருகத்திற்காக காத்திருந்தான். வேடன் மரம் ஏறும் போது மரத்தில் இருந்த வில்வ இலைகள் சிவலிங்கம் மீது விழுந்தன.

முதல் ஜாம பூஜை தொடங்குதல் :

அவ்வேளையில் ஒரு பெண்மான் நீர் நிரம்பிய அந்த தடாகத்திற்கு வந்தது. அது முதல் ஜாமம் முடிவடையும் நேரம் ஆகும். மானைக் கண்ட வேடன் மிகவும் மனம் மகிழ்ந்து தனக்கான இரை கிடைத்துவிட்டது என்று எண்ணி தான் கொண்டு வந்த அம்பை எடுத்து அதை வில்லில் பூட்டினான். அப்போது அவனது உடல் அசைவினால் ஒரு வில்வ இலையும், பருகுவதற்காக எடுத்து வந்த சிறிது தண்ணீரும், மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இத்தகைய செயலால் அந்த வேடன் அந்தச் சிவராத்திரியின் முதற்கால பூஜையை நிறைவு செய்தான். அவன் அறியாமல் அவன் செய்த இந்த பூஜையின் பயனாக அவனது பாவங்கள் யாவும் அழிந்தன.

பெண்மான் வேண்டுதல் :

வேடன் அம்பில் வில்லினை பூட்டிய சத்தத்தைக் கேட்ட பெண்மான் என்ன செய்வேன்? யாது நிகழுமோ என்று அச்சம் கொண்டது. இந்த வேடன் என்னை எப்படியும் இவன் பூட்டிய பாணத்தால் என்னை கொன்றுவிடுவான், தப்பிக்க வழிகள் யாதும் இல்லை, ஆயினும் தான் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று யோசித்து வேடனை நோக்கி வேடனே... என்ன செய்ய இருக்கின்றாய்? என்று பெண் மான் வினவியது.


Share this valuable content with your friends