No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பனின் அறுபடை வீடுகள் !!

Dec 04, 2018   Ananthi   484    ஆன்மிகம் 

கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம். பார்க்கும் திசையெல்லாம் ஐயனே! கேட்கும் ஒலியெல்லாம் சரணமே! என்று இருக்கும். அவ்வாறெல்லாம் போற்றப்படும் ஐயப்பனின் அறுபடைவீடுகள் பற்றி பார்ப்போம்!!..

தர்ம சாஸ்தாவான ஐயப்பனின் அறுபடை வீடுகள் :

1. ஆரியங்காவு

2. அச்சன்கோவில்

3. குளத்துப்புழா

4. எரிமேலி

5. பந்தளம்

6. சபரிமலை

1. ஆரியங்காவு :

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக ஐயப்பன் காட்சித் தருகிறார்.

2. அச்சன்கோவில் :

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் ஐயப்பனையும் தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

3. குளத்துப்புழா :

செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இந்த ஊர். இங்கு ஐயப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ளதால் பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டுள்ளது.

4. எரிமேலி :

கேரளாவில் உள்ள இத்தலத்தில் ஐயப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

5. பந்தளம் :

இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் பந்தள அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன.

6. சபரிமலை :

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, கேட்பவர்களுக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் ஆறுபடை வீடுகளான இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.


Share this valuable content with your friends