No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா !

Nov 20, 2018   Ananthi   397    ஆன்மிகம் 

தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை. மூர்த்தி, திருவண்ணாமலை, தீர்த்தம், மலை என அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.

சிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். திருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தப்படியால் இது அண்ணாமலை என்றானது.

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த மலை இந்த திருவண்ணாமலை.

கார்த்திகை தீபம் :

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தீப திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் இந்த மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

பரணி தீபம் :

நவம்பர் 23ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சன்னதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகாதீபம் :

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர்.

அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரரை தரிசித்து இறைவன் அருளை பெறுவார்கள். நாமும் சென்று தரிசித்து இறைவன் அருளை பெறுவோம்.


Share this valuable content with your friends