No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சுதஞ்சணன் கூறிய மந்திரம்… அகதியாக மாறிய சீவகன்..!!

Mar 14, 2023   Ramya   657    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சுதஞ்சணன் கூறிய மந்திரம்… அகதியாக மாறிய சீவகன்..!!

🌟 சீவகன் அன்று கூறிய இந்த வாக்குறுதிகள் பதுமையை ஆறுதல் படுத்துவதாக இருந்தது. அரண்மனையில் இருந்து வெளியேறிய சீவகன் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் பல்லவ தேசத்தை விட்டு சுதஞ்சணன் கூறிய பாதையில் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டான்.

🌟 காட்டு பாதையின் வழியாக பயணத்தை மேற்கொண்டால், வெப்பத்தின் காரணமாக உடல் சோர்வும், பயணங்களில் தடையும் ஏற்படலாம் என்று எண்ணி கல்வழி என்னும் வெப்பம் குறைவான பாதையின் வழியாக இரவோடு இரவாக அரண்மனையில் இருந்து வெளியேறி சென்று கொண்டிருந்தான்.

🌟 ஒரு இடத்தில் அமைதியாக நின்று வந்த வழியை திரும்பி பார்த்தான். அப்போது, தான் ஒரு மலை முகட்டின் உச்சியில் இருப்பதையும், தூரத்தில் ஏழெட்டு குதிரைகளில் சில வீரர்கள் தான் இருக்கும் திசையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் பார்த்தான்.

🌟 சுதஞ்சணன் கூறிய மூன்றாவது மந்திரத்திற்கு இப்பொழுது வேலை வந்து விட்டது என்று மனதில் எண்ணி கொண்டு சுதஞ்சணன் கூறிய தோற்றத்தை மாற்றக்கூடிய மந்திரத்தை மனதில் கூறினான்.

🌟 உடனே அவனது உடல் தோற்றமானது முன்பிருந்ததை விட சிறியவனாக மாறியது. இவன் தான் அவன் என்று கூறும் அளவிற்கு ஒரு ஒற்றுமை கூட இல்லாமல் முழுவதுமாக மாறி இருந்தான்.

🌟 ஆனால் அவன் உடலில் அணிந்திருந்த நகைகளும், உடைகளும் ஏதோ பெரிய இடத்துடன் தொடர்பு கொண்டவனாக இருக்க முடியும் என்பதை உருவகம் செய்து கொள்ளும் வகையில் இருந்தது.

🌟 இதனை அறிந்து கொண்ட சீவகன் உடனே தன்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் எடுத்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த சிலரிடம் கொடுத்து விட்டு எதுவும் இல்லாத, ஓர் அகதி போல எந்த ஐயமும் இல்லாமல் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டான்.


🌟 தூரத்தில் வந்து கொண்டிருந்த வீரர்கள் அனைவரும் சீவகனை தேடிய வண்ணமாக சீவகனுக்கு அருகில் வந்தனர். தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது சீவகனை போன்றே தெரிந்தாலும் அருகில் வந்த போது இவன் தாங்கள் தேடுகின்றவன் இல்லை என்று புரிந்து கொண்டார்கள்.

🌟 எதுவும் தெரியாதது போல அந்த அகதி (தோற்றத்தை மாற்றி கொண்ட சீவகன்) வந்திருந்த படை வீரர்களிடம் என்னவாயிற்று? யாரை தேடுகின்றீர்கள்? ஏன் இவ்வளவு பதற்றத்துடன் இருக்கின்றீர்கள்? என்று வினவினான்.

🌟 அதற்கு படை வீரர்களின் ஒருவன், இதெல்லாம் உமக்கு தேவையில்லாத விஷயம். இது அரசு தொடர்பான செயல்கள் என்று கூறினான்.

🌟 அப்படியில்லை வீரர்களே, எனக்கு தெரிந்த தகவலாக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் கூறலாம் அல்லவா! என்னுடன் வந்து கொண்டிருந்த ஒருவரும் திடீரென்று காணாமல் போய்விட்டார் என்று கூறினான் அகதி.

🌟 என்னது! உன்னுடன் வந்தவரை காணவில்லையா? அவர் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்? அவருடைய பெயர் ஏதாவது உமக்கு தெரியுமா? என்று கேட்டான் வீரர்களில் ஒருவன்.

🌟 அதற்கு உடனே அந்த அகதி, என்னுடைய தனிப்பட்ட செயல்பாடுகளில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்றும், எப்படி நீங்கள் கூறுகின்றீர்களோ அதைப்போல தான் இதுவும் என்று வார்த்தைகளால் அவர்களிடம் விளையாடினான்.

🌟 பொறுமையை இழந்த படை வீரர்களில் ஒருவன், ஓ! உன்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் அரசு தலையீடு இருக்கக்கூடாது அவ்வளவு தானே. இனி தலை இருந்தால் தானே உனக்கென்று தனிப்பட்ட விஷயம் இருக்கும் என்று ஒருவன் கூற, உயிர் வேண்டும் என்றால் யார் அவன்? பெயர் என்ன? என்று இன்னொருவன் வினவினான்.

🌟 இனியும் விளையாடினால் விளையாட்டு வினையாக மாறிவிடும் என்பதை புரிந்து கொண்ட அகதியும், தவறாக எண்ண வேண்டாம் வீரர்களே. ஏதாவது தவறிழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். என்னுடன் பயணித்தவர் எனக்கு நெருக்கமானவர் கிடையாது. என்னோடு அவரும் ஒரு அகதியாக வந்திருந்தார். அவருடைய பெயர் சீவகன். அவர் அரண்மனையில் இருந்து நேற்று இரவு கிளம்பி புறப்பட்டு வந்ததாக கூறினார் என்றான்.


🌟 என்னது அவருடைய பெயர் சீவகனா? அவர் எந்த பக்கம் சென்றார்? அவர் ஏதாவது உன்னிடம் பேசினாரா? என்று வினவினார்கள் படை வீரர்கள்.

🌟 அவர் எந்த பக்கம் சென்றார் என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் தொலைவில் உங்களை பார்த்ததும் என் அருகில் இருந்தவரை காணவில்லை. ஆனால் அவர் என்னிடம் சில வார்த்தைகள் மட்டும் கூறினார்.

🌟 அதாவது இன்னும் ஒன்பது மாதங்களில் நிச்சயமாக இந்த ஊருக்கு திரும்பி வருவேன் என்றும், இப்பொழுது தான் செய்த இந்த காரியத்திற்காக தன்னை மன்னிக்கும்படி மன்னனிடமும், உலோகபாலனிடமும் தெரிவிக்க வேண்டும் என்றும், இளவரசியான பதுமைக்கு தன்னுடைய காதலை சொல்ல வேண்டும் என்றும் என்னிடம் சொல்லி கொண்டிருந்தார் என்று கூறினான் அகதி.

🌟 படை வீரர்கள் அகதியின் கூற்றை கேட்ட பின்பு இனியும் சீவகனை தேடி புறப்பட்டால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

🌟 அகதி கூறிய தகவலை உடனடியாக மன்னரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணிய படை வீரர்கள், அவருக்கு தகவல் கூறியமைக்கு நன்றி என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றனர்.

🌟 வீரர்கள் சென்று கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்த அகதி, அவர்கள் முழுவதுமாக சென்றதும் மீண்டும் மந்திரத்தை உச்சரித்து தனது பழைய தோற்றத்திற்கு வந்தான்.

🌟 படை வீரர்கள் அரசன், இளவரசி மற்றும் இளவரசனை அடைந்து அகதி கூறிய தகவல்களை அவர்களிடம் தெளிவாக கூறினார்கள்.

🌟 சீவகன் விரைவில் தம்முடைய நாட்டிற்கு வந்துவிடுவார் என்றும், ஏதோ சில காரணங்களுக்காக தான் நம்மை விட்டு சென்றிருக்கின்றார் என்பதையும் புரிந்து கொண்ட பதுமை அவர் கூறியதை எண்ணிக் கொண்டு, சீவகன் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.


Share this valuable content with your friends