No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - பதுமையை திருமணம் செய்து கொண்ட சீவகன்…!!

Mar 14, 2023   Ramya   169    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... பதுமையை திருமணம் செய்து கொண்ட சீவகன்…!!

🌟 இருவரும் என்ன பேசுவது? என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணமாக இருந்தனர். பதுமையோ தனது மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை எவ்விதத்திலாவது சீவகனிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சிறு சிறு செயல்களின் மூலம் தன் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்தினாள்.

🌟 அதாவது நந்தவனத்தில் சீவகனை பார்க்கும் போதெல்லாம் ஒருவிதமான நாண புன்னகையும், தலையில் விரிந்திருந்த கூந்தலை ஒதுக்கியும், மறைமுக பார்வையினால் ஒருவிதமான ஈர்ப்பையும் ஏற்படுத்தி கொண்டே இருந்தாள் பதுமை. என்ன செய்வது, பெண் அல்லவா! தனது எண்ணங்களை செய்கையின் மூலமாகவே வெளிப்படுத்தி கொண்டிருந்தாள்.

🌟 பதுமையின் எண்ண ஓட்டங்களை தெளிவாக அறிந்து கொண்ட சீவகன், என்ன செய்வது என்று புரியாமலும், அதை தவிர்க்க இயலாமலும் அமர்ந்திருந்தான். பதுமையின் அழகும், விழி பார்வையும், கூந்தலில் இருந்து வெளிப்படும் வாசமும் அவனிடத்தில் ஒருவிதமான உணர்வுகளை உருவாக்கியது.

🌟 விலகி விலகி சென்றவன் திடீரென்று பதுமையின் விரலை பிடித்தான். சீவகன் பதுமையின் விரலை பிடித்ததும் அவளின் மனதில் புதுவிதமான உணர்வுகளும், எண்ணங்களும் சிறகடிக்க துவங்கின. விரல்கள் ஒன்றோடொன்று இணைய இருவரின் மனங்களும் விண்வெளியில் பறந்தன.


🌟 பதுமைக்கோ, தன்னுடைய மனம் கவர்ந்தவனை அத்தான் என்று அழைக்க வேண்டும் என்ற பித்தான நினைவுகள் அதிகரிக்க துவங்கின. சிறு நேரத்தில் தனது மனதிலும், செயல்பாடுகளிலும் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

🌟 விரல்களின் தீண்டுதலுக்கு எந்தவித எதிர்ப்பும் வராத பட்சத்தில் சீவகன் தன் இமை பார்வையில் அவளை நோக்க, அதில் ஒருவரை ஒருவர் மயங்கி நின்று கொண்டிருந்தார்கள். சுழல்வது பூமியா? அல்லது புயலா? என எதுவும் புலப்படாமல் இருவரும் மோன நிலையில் இருந்தனர்.

🌟 சீவகனின் அடுத்தடுத்த தீண்டல்களும், விளையாட்டுகளும் எல்லைகளை கடக்கவே அவளின் நாணமானது பாதுகாவலன் போல அவன் விளையாட்டுகளை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், நம் மணம் முடியட்டும் என்று கூறினாள்.

🌟 அதற்கு சீவகன், இதுபோல் நிகழ்வதில் தவறொன்றும் இல்லையே! இருமனம் கலப்பது தானே திருமணம். அதிலும் நம் மணமானது காந்தர்வ மணமல்லவா! என்று கூறினான் சீவகன்.

🌟 இவ்விதம் நிகழ்வது நம் மரபில் இல்லையே. நம் மணமானது காந்தர்வ மணமாக இருந்தாலும், பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு நிகழ்வது தானே முழுமையான திருமணம். அப்பொழுது தானே அனைத்து இன்பங்களும் நன்முறையில் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று பதுமை கூறினாள்.

🌟 பதுமையின் எண்ணங்களை மதிக்கும் பொருட்டு நீ சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இன்றைய மாறாத சில நிகழ்வுகள் கூட, கால ஓட்டத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட நேரிடும். மாற்றங்கள் எப்பொழுதும் மாற்றம் அடையாததாக இருந்ததில்லை அல்லவா! எனவே உம்முடைய விருப்பத்தை நான் ஏற்று கொள்கின்றேன் என்று சீவகன் கூற, யாரோ இவர்களின் அருகில் வருவது போல சத்தம் கேட்டனர்.

🌟 உன்னை தேடி உமது தோழியர்கள் வந்து கொண்டிருப்பது போல தெரிகிறது. நம்மை இந்நிலையில் யாரும் காண வேண்டாம். நான் இப்பொழுது என்னுடைய அறைக்கு செல்கின்றேன். நீயும் பாதுகாப்பாக செல்வாயாக! என்று கூறி யாருடைய கண்ணிலும் படாமல் தனது அறையை நோக்கி சென்றான் சீவகன்.

🌟 ஆனால் பதுமையின் மனமோ சீவகன் அமர்ந்திருந்த அந்த வெற்றிடத்தை பார்த்து மேலும் கவலை கொண்டது. அருகில் இருக்கும் பொழுது ஏதோ பலம் வாய்ந்தவர்களுடன் இருக்கின்றோம் என்று உணர்ந்த மனம், அவன் சென்ற சிறு நொடியில் பலவீனத்தை உணர்ந்தது. அப்போது அவ்விடத்திற்கு தோழியர்கள் வர, இனம்புரியாத கவலையோடு அவர்களுடன் சென்று தனது அறையை அடைந்தாள்.

🌟 சீவகன் தன்னுடைய அறையில் நுழையும் போது உலோகபாலன் சீவகனை பார்த்து, என்ன தோழனே! அனைத்தும் நல்ல முறையில் இருக்கின்றதா? இதில் ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று வினவினான்.


🌟 குறைகள் ஏதுமில்லை தோழனே! என்று சீவகன் கூற, அப்பொழுது சீவகனின் உடையில் குங்குமம் இருப்பதை கண்டுகொண்டான் உலோகபாலன். பின் என்ன தோழனே உன்னுடைய உடையில் குங்குமம் இருக்கின்றது? என்று வினவினான். இதை சற்றும் கவனிக்காத சீவகன் என்ன சொல்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தான்.

🌟 மேலும் உலோகபாலன் சிரித்த வண்ணமாக தந்தை உங்களிடம் ஒன்று சொல்ல சொன்னார். உங்களுக்கும், பதுமைக்கும் திருமணம் செய்வதற்கு நாளை உகந்த நாளாக இருக்கின்றதாம். ஆகவே அதுவரையிலாவது இருவரும் பொறுமையுடன் இருக்கும்படி கூறினார். சீவகனும் சிரித்த வண்ணமாக பொறுமையுடன் தான் இருக்கின்றோம் என்றான்.

🌟 மணம் புரிவதற்கான நாளும் வந்தது. இவர்கள் எதிர்பார்த்த விதத்திலேயே திருமணமும் நல்ல முறையில் நடைபெற்றது. பெண் வீட்டில் அனைவரும் சூழ்ந்திருக்க சீவகன் பதுமையை திருமணம் செய்து கொண்டான்.


Share this valuable content with your friends