சித்திரலேகையும், அப்சரஸ் தேவதைகளும் நினைத்தது வேறு, ஆனால் அங்கு நடந்தது வேறு. ஏனெனில் தாங்கள் செய்த கபட நாடகத்தை அறியாமல் அங்கிருந்த அனைவரும் உண்மையாக எழுந்து தங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள் என்றும், அவ்வேளையில் அனைத்தும் உணர்ந்தவரான சிவபெருமான் இவர் பார்வதிதேவி அல்ல என அனைவர் முன்னிலையிலும் தங்களது கபடத்தை வெளிப்படுத்தி அங்கிருந்தோரை திகைப்படைய வைப்பார் என்றும் எதிர்பார்த்தார்கள்.
மேலும், இச்செயலானது அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஒருவிதமான புதுச்சூழலையும், உற்சாகத்தையும் அளிக்கும் என எண்ணி இத்திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி தங்களின் வாதங்களுக்கான பதில் காணவும் இச்சூழல் சாதகமாக இருக்கும் எனவும் எண்ணினார்கள். ஆனால், எம்பெருமானோ அவர்கள் நினைத்த செயல்களை புரியாமல், இவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக, பார்வதி தேவியாக வேடம் தரித்த சித்திரலேகையை தனது அருகில் அமர வைத்தது அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும், ஒருவிதமான சங்கடத்தையும் ஏற்படுத்தி விட்டார்.
இந்த குழப்பத்திலிருந்து எப்படி விடுபடுவோம் என சிந்தித்து கொண்டிருந்த தருவாயில் யாவரும் எதிர்பாராத விதமாக நாயகனின் உண்மையான நாயகியான பார்வதி தேவி புடைசூழ அவ்விடத்திற்கு வந்ததை கண்டு சித்திரலேகையும், அப்சரஸ் தேவதைகளும் என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்தனர்.
பார்வதி தேவியை கண்ட சிறிது நேரத்தில் சித்திரலேகை தான் எடுத்த மாயத் தோற்ற வடிவம் நீங்கி தன்னுடைய உண்மையான வடிவத்தை பெற்றார். இதேபோன்று மற்றவர்களும் தங்களது சுய உருவத்தை அடைந்தனர். இவர்களின் சுய உருவத்தை கண்ட தேவர்களும், அங்கு கூடி இருந்தவர்களும் வியப்படைந்தனர். அதுமட்டுமின்றி அங்கிருந்த மகிழ்ச்சி மறைந்து ஒருவிதமான பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சித்திரலேகையும், அப்சரஸ் தேவதைகளும் மிகவும் பதற்றத்துடன் தாங்கள் அனைவரும் செய்த செயலை மன்னிக்க வேண்டி விழிகளில் நீர் நிரம்ப மனதில் அச்சத்துடன் பார்வதி தேவியிடம் சென்று, தேவி!!.. எங்களை மன்னித்துவிடுங்கள் என்று வேண்டினார்கள்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து வேடிக்கை செய்து இங்குள்ள அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று எண்ணியே இச்செயலை செய்தோம் என்றார்கள். மேலும், விளையாட்டாக செய்தது இவ்வளவு வினையாக மாறும் என்று நாங்கள் யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தங்களது மனதில் இருந்த எண்ணங்களை பார்வதி தேவியிடம் கூறி அன்னையின் பாதங்களில் விழுந்து தங்களை மன்னிக்குமாறு வேண்டினார்கள்.
அப்பொழுது பார்வதிதேவி தனது அருகில் நின்று கொண்டிருந்த சிவபெருமானை பார்த்தார். எம்பெருமான் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருப்பதைக் கண்டதும் இதுவும் இவரது திருவிளையாடல்களே என்பதை உணர்ந்தார் பார்வதிதேவி.
பின்பு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சித்திரலேகையை தூக்கி, இது அப்சரஸ் தேவிகள் நாடகம் நடைபெறும் இடம் என்று என்னிடம் யாரும் உரைக்கவில்லையே என்று கூறி சித்திரலேகையிடம் தனது பதியானவரை என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்பது போல் பார்வதி தேவியும் கேட்டார்.
தேவியிடம் இருந்து சற்றும் எதிர்பாராத இந்த பதிலால், சித்திரலேகை மற்றும் அவருடன் இருந்த மற்ற தேவிகளின் கவலைகள் மற்றும் அச்சம் என யாவற்றையும் மறந்து அனைவரும் சிரித்தனர்.
பின்பு, பார்வதி தேவியும் சித்திரலேகையை மன்னித்து அவளை அணைத்துக் கொண்டார். அப்பொழுது அங்கிருந்த தேவர்கள் மற்றும் தேவமாதர்கள் என அனைவரும் சிரித்து ஆரவாரம் செய்தனர். அப்பொழுது எம்பெருமானோ!!... மற்றவர்களை கவர்ந்து வியப்பளிப்பதில் சிறந்தவர்களாயிற்றே அப்சரஸ் ஸ்திரிகள் என கூறினார்.